”உங்கள் நாட்டு அரசைக் கவிழ்க்க எங்களுடன் ரகசியமாக இணையுங்கள்”; அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு

கியூபா மற்றும் அமெரிக்கா இடையே மிக நீண்டகாலமாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கியூபா அரசைக் கவிழ்க்க அந்நாட்டு மக்களை, ”அமெரிக்க உளவுத்துறையுடன் இணைந்து செயல்படுங்கள்” என மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளது உலக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்கா, தொடர்ந்து தனது அண்டை நாடான கியூபாவைச் சீண்டி வருகிறது.  முன்னதாக அதிபர் ட்ரம்ப் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது, ”ஈரான் போரிலிருந்து திரும்பும் அமெரிக்கப் போர்ப்படைகள், கியூபா அருகே நிறுத்தப்படலாம். அங்குள்ள நிலைமையைக் கையாள மார்கோ ரூபியோ அனுப்பப்படுவார்”  என்று, கியூபாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டுக்கான மறைமுக எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். 

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மார்க்கோ ரூபியோ, தனது சமூக வலத்தளப்பக்கதில், ”கியூபாவில் மாற்றத்தை உருவாக்க விரும்பும் மக்களுக்கு இதுவே சரியான தருணம்.  அமெரிக்க உளவுப்படையான சிஐஏ வுடனான உங்களது ரகசிய தொடர்பின் மூலம், நீங்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவின் இந்த தொடர் அச்சுறுத்தல்கள் உலக அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த மறைமுக மிரட்டலை, கியூப அரசு எள்ளி நகையாடியுள்ளது. இதனிடையே, அமெரிக்காவிற்குப் பதிலடி தரும் வகையில், கியூபாவின் துணை வெளியுறவு அமைச்சர் கார்லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோ, ”அமெரிக்கா தற்போது சிஐஏ-விற்கான பொது ஆட்சேர்ப்பை நாடும் அளவிற்கு வந்துவிட்டது. ஒரு பற்பொடியை விற்பது போல இந்த சேவைகளை விற்க வேண்டிய நிலைக்கு, சிஐஏ உளவு அமைப்பு தள்ளப்பட்டிருக்கிறது என்றால், அதற்குள் எவ்வளவு பெரிய விரக்தியும், அவலமும் இருக்க வேண்டும்” என்று சாடியுள்ளார்.