‘ட்ரோன்’ தாக்குதலால் ‘பாப் எல் மண்டேப்’ கடல் வழித்தடம் பாதிக்கப்பட்டதும், கஜகஸ்தானின் குழாய் வழி எண்ணெய் ஏற்றுமதி திறன் 80 சதவீதம் முடங்கியதும், எரிசக்தி சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க – ஈரான் அமைதி பேச்சுவார்த்தை பின்னடைவு மற்றும் டொனால்டு டிரம்பின் எச்சரிக்கைகள் இப்பதற்றத்தை கூட்டியுள்ளன.
இவற்றுடன் வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி கொள்கை அறிவிப்பால் சர்வதேச கமாடிட்டி சந்தை நடப்பு வாரத்தில் கடும் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் 102 டாலர் வரை உயர்ந்து 97 டாலராகவும், சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் 4,050 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் 58 டாலராகவும் நிலைகொண்டன. பணவீக்க அச்சத்தால் டாலர் குறியீடு உயர்ந்து 101.46 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
பணவீக்க அச்சம் இந்திய சந்தையில் தங்கம் குறிப்பிட்ட எல்லைக்குள் வர்த்தகமாகிறது. இதன் ரெசிஸ்டன்ஸ் 1,46,000 மற்றும் 1,48,000 ரூபாயாகவும், சப்போர்ட் 1,41,000 மற்றும் 1,39,800 ரூபாயாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் வட்டி விகிதங்கள் உயரும் போது தங்கம், வெள்ளி விலையேற்றம் கட்டுப்படும் என்பதால், குறைந்த நிதியுடன் வர்த்தகம் செய்வதே பாதுகாப்பானது.
மேலும், எண்ணெய் உயர்வால் பணவீக்கம் கூடும் என்ற அச்சத்தால், ஜூலை 28-29ம் தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
செப்டம்பரில் வட்டி உயர்வுக்கான சாத்தியக்கூறு 80 சதவீதத்திற்கு மேல் இருந்தாலும், ஜூலை கூட்டத்தில் உடனடி வட்டி உயர்வை அறிவிக்க மாட்டார்கள் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
