‘உதயநிதியை கோமாளி என்பதா? அவர் ஜாதகம் கொஞ்சம் வித்தியாசமான ஜாதகம்’: ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசுபவர்களுக்கு தி.மு.க அமைப்பு செயலாளரும் மூத்த தலைவருமான ஆர்.எஸ். பாரதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் மற்றும் செயல்பாடுகள் குறித்து விலாவாரியாகப் பேசினார்.

மேடையில் உரையாற்றிய ஆர்.எஸ். பாரதி, உதயநிதி ஸ்டாலினுக்குக் கேடுகாலம் ஆரம்பித்துவிட்டது என்று பேசுபவர்களுக்குத்தான் உண்மையில் கேடுகாலம் ஆரம்பித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ஜாதகமே கொஞ்சம் வித்தியாசமான ஜாதகம். ஒரே ஒரு ஓட்டுக் கூடக் குறையாமல், இந்த மாநிலத்தில் ஆட்சியை மாற்றிக் காட்டிய திறமை உதயநிதி ஸ்டாலினுக்கு உண்டு என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கழகத்தின் இளைஞரணி செயலாளராக இருந்து இவ்வளவு சாதனைகளைச் செய்த உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து ‘கோமாளி’ என்று பேசுகிறார்கள். சட்டசபைக்குள் வரப்போகும் நீங்களா கோமாளி, அல்லது அவரா கோமாளி என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்? என்று சாடினார்.

எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த ஆர்.எஸ். பாரதி, சட்டமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்து கொண்டு இவர் என்னத்தை பேசப் போகிறார்? அவருக்கு என்னத்தைப் புரியப் போகிறது? இவர் பேசுவது அவருக்குப் புரியாது, சபாநாயகர் பேசுவது இவருக்கு புரியாது. பிறகு சட்டமன்றமே இவரை பார்த்துச் சிரிக்கும் நிலைதான் வரும் எனக் குறிப்பிட்டார். மேலும், அப்பாவுக்குக் காலணா பிரயோஜனம் இல்லாமல், அடுத்தவன் தயவில் ஜெயித்து வந்தவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கிறார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தனக்கு வேண்டிய வழக்குகளுக்காக சென்று நின்றதைவிட, கட்சிப் பணிகளுக்காகவும் தொண்டர்களுக்காகவும் நீதிமன்றப் படிகளையேறி நின்றவர் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். அரசியல் அனுபவமும், சட்டமன்ற அறிவும் இல்லாமல் உதயநிதி ஸ்டாலினைக் குறை சொல்பவர்களுக்குக் காலமே பதில் சொல்லும் என்றும், தி.முக.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஆர்.எஸ். பாரதி தனது உரையில் உறுதியாகத் தெரிவித்தார்.

Source link