உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வு வினாத்தாள் கசிவு.. உதவி பேராசிரியர் கைது

உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிவு:

தேசிய அளவில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உத்தரகாண்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவை தொடர்ந்து, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வீர மாதோ சிங் பண்டாரி உத்தரகாண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இங்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பி.டெக் மின்னணுவியல் பாடப்பிரிவை சேர்ந்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் கசிந்தது. இதை தொடர்ந்து, பி.டெக் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வி.கே.படேல் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் உதவி பேராசிரியர் ஆஷிஷ் குமார் குப்தா வாட்ஸ்அப்பில் பகிர்ந்த கேள்விகள், இறுதி தேர்வு வினாத்தாளுடன் 95 சதவீதம் வரை ஒத்துப்போனது கண்டறியப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேராசிரியர் பணியாற்றி வந்த இரண்டாம் ஆண்டு மின்காந்த புலக் கோட்பாடு தேர்வையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.

பல்கலைக்கழகம் சுற்றறிக்கை:

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், “தேர்வு முறையின் நம்பகத்தன்மை, தூய்மை மற்றும் மாணவர் நலனை காப்பதற்காக, இந்த ரத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு பயிலும் 355 மாணவர்கள் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் 22 மாணவர்களுக்கான ரத்து செய்யப்பட்ட தேர்வுகள், 2026 ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் மறுபடியும் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.

உதவி பேராசிரியர் கைது:

பல்கலைக்கழகத்தின் புகாரை தொடர்ந்து, கல்லூரியின் உதவி பேராசிரியர் குப்தா இடைநீக்கம் செய்யப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்திய தேசிய மாணவர் சங்கம் மற்றும் இளைஞர் குழுக்களின் உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும் தொடர்ந்து நிகழும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள், மாணவர்களின் கடின உழைப்பு, நேரம் மற்றும் எதிர்காலத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Source link