உருவாகிறது புதிய காற்றழுத்தம்; இன்று முதல் மழை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், அதன் விளைவாக தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப் போவதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று சிவகங்கை மாவட்டம் அமராவதி புதுார், பேராட்டுக்கோட்டை; ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி பகுதிகளில் தலா 9 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை; நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு; திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது இன்று தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பின், அதன் நகர்வுகள் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை, அடுத்து வரும் நாட்களில் தீவிரமடையுமா என்பது தெரிய வரும். துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்காலில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல், வரும் 25ம் தேதி வரை கன மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கர்ப்பிணியரை பாதுகாப்பது அவசியம்’

‘அதி கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவ சேவைகள் வழங்குவதை உறுதி செய்வதுடன், கர்ப்பிணியரை முன்கூட்டியே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’ என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அமைச்சர் அருண்ராஜ், துறை செயலர் தாரேஸ் அகமது ஆகியோர், அனைத்து கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:
நோய் பரவல் தடுப்பு, உயிரிழப்பு தடுப்பு மற்றும் தடையற்ற மருத்துவ சேவை ஆகிய மூன்று செயல்பாடுகளையும் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் தடையற்ற மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வினியோகம் தடையின்றி செயல்பட, குறைந்தது ஏழு நாட்களுக்கு தேவையான அவசரகால இருப்பை பராமரிக்க வேண்டும்.
தேவைக்கேற்ப மருத்துவக் குழுக்கள், நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், புயல் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் வாயிலாக சிகிச்சை வழங்க வேண்டும். கர்ப்பிணியர், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நீண்டகால சிகிச்சை பெறுவோர், பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரசவ காலம் நெருங்கியுள்ள கர்ப்பிணியர், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் தங்குவதை தவிர்த்து, தேவையான மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link