அசுன்சியான்: உலக ஸ்கேட்டிங் விளையாட்டில் இந்தியாவின் விஷ்ணு பிரசாத் தங்கம், லோனாத் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். ‘ரிலே’ போட்டியில் முதன் முறையாக பதக்கம் (வெண்கலம்) வென்றது இந்திய பெண்கள் அணி.
பராகுவேயில் உலக ஸ்கேட் விளையாட்டு நடக்கிறது. ஜூனியர் ஆண்களுக்கான ஒன் லாப் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் விஷ்ணு பிரசாத் (கேரளா), ஆர்.ஏ.லோனாத் (புதுச்சேரி) பங்கேற்றனர். போட்டி துவங்கியதும் மின்னல் வேகத்தில் பாய்ந்த விஷ்ணு, 00.30.394 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 0.025 வினாடி பின்தங்கிய லோனாத், இரண்டாவது இடம் பெற, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
சர்வதேச அளவில் முன்னணி வீரர்கள் 44 பேர் பங்கேற்ற இப்போட்டியில் இந்திய வீரர்கள் இருவரும் தங்கம், வெள்ளி வென்று அசத்தினர். ஜெர்மனின் நிக்லஸ் (00.30.782 வினாடி) வெண்கலம் வசப்படுத்தினார்.
ஏற்கனவே இப்போட்டியில் இந்திய ஜூனியர் பெண்கள் அணி, ‘ரிலே’ போட்டியில் தங்கம் வென்றது. தவிர இந்தியாவின் ஆனந்த்குமார் இரு பதக்கம் (வெள்ளி, வெண்கலம்) வென்றிருந்தார்.
