உ.பி. அரசியலில் அதிர்ச்சி: 7,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதியில் 10,000 போலி வாக்காளர் பதிவுகள்

Maulshree Seth

உத்தரப்பிரதேச மாநிலம் பீலிபித் (Pilibhit) சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் 10,470 பதிவுகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாக இரு தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு (ERO) எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தொகுதி வாக்காளர் பதிவு மையத்தில் பணியாற்றிய கணினி உதவியாளர் ஒருவரின் பணியும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர்கள் மூன்று பேர் மீதும் உதவி மாவட்ட தேர்தல் அதிகாரி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலத்தில் வாசிக்க 

பீலிபித் மாவட்ட தேர்தல் அதிகாரி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின்படி:

பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி உதவியாளர் கடந்த மே 31 முதல் ஆகஸ்ட் 29 வரை வாக்காளர் விவரங்களை திருத்துவதற்காக 13,779 ‘படிவம் 8’ (Form 8) விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆனால், இந்த மாற்றங்களைச் செய்யக் கோரி பெறப்பட்ட எந்தவொரு எழுத்துப்பூர்வ விண்ணப்பப் படிவங்களோ அல்லது அதற்குரிய ஆதார ஆவணங்களோ அலுவலகத்தில் இல்லை.

இந்த 13,779 விண்ணப்பங்களில் 10,470 படிவங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட 10,470 பதிவுகளிலுமே முறைகேடுகள் நடந்துள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

தற்போது இந்த முறைகேடான படிவம் 8 பதிவுகளைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு இரு தேர்தல் பதிவு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளின் (AERO) பங்கு குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, ஏப்ரல் 10 முதல் அக்டோபர் 21 வரை பெயர் சேர்ப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் 6 மற்றும் பெயர் நீக்கத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் 7 ஆகியவற்றையும் ஆய்வு செய்ய பீலிபித் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாக்காளர்களின் புகார்கள்

தலைமை தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா கூறுகையில், அக்டோபர் 19 அன்று சமாஜ்வாதி கட்சி சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த விசாரணை முடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

பீலிபித்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பைசான் அலி கான் என்பவர், ஏப்ரல் 10-ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தன் பெயரும் தன் தம்பியின் பெயரும் இருந்தும், பின்னர் வாக்காளர் அடையாள அட்டையைச் (EPIC) சரிபார்த்தபோது, தன் பெயருக்குப் பதிலாக ‘ரயீஸ் அலி’ என்றும், தன் தம்பியின் பெயருக்குப் பதிலாக ‘குஃப்ரான் அஸ்லம்’ என்றும் தவறாக மாற்றப்பட்டிருந்ததாகக் புகார் அளித்தார்.

காங்கிரஸின் உள்ளூர் தலைவர் குமுத் கங்குவார் மற்றும் அவரது குழுவினர் சுமார் 3.48 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை ஆய்வு செய்ததில், 13,150 பதிவுகளில் குளறுபடிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த மாற்றங்கள் பெரும்பாலானவை நள்ளிரவிலும், விடுமுறை நாட்களிலும்தான் செய்யப்பட்டுள்ளன.

விவரங்கள் மாற்றப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலோர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தேர்தல் நாளில் வாக்களிக்கச் செல்லும்போது அடையாளங்கள் பொருந்தவில்லை எனக் கூறி அவர்களின் வாக்குரிமையைப் பறிக்கவே இந்தச் சதி செய்யப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

கடந்த 2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பீலிபித் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சஞ்சய் சிங் கங்குவார், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை வெறும் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார். இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட போலி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில், பீலிபித் மக்களவைத் தொகுதியை பாஜக 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

எதிர்க்கட்சிகளின் கண்டனம்:

இந்த சம்பவத்தை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி, உ.பி. முழுவதும் உள்ள சுமார் 100 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலிலும் இதேபோன்று ஆய்வு நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி, மாநிலத்திலுள்ள 75 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் வாக்காளர் பட்டியலை தீவிரமாகச் சரிபார்க்க உத்தரவிடப்போவதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் ஆராதனை மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, “வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மையில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. யாராவது வேண்டுமென்றே இந்த மாற்றங்களைச் செய்திருந்தால், அது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source link