உத்தரப்பிரதேச அரசியலில் தங்களது செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி தீவிரமான வியூகங்களை வகுத்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா (INDIA) கூட்டணியின் கீழ் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து களம் கண்ட காங்கிரஸ், 6 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது. இந்த உத்வேகத்துடன், வரவிருக்கும் 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை நோக்கி காங்கிரஸ் தற்போதிலிருந்தே களத்தை தயார் செய்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற காங்கிரஸ் விரும்புகிறது. மொத்தம் 403 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில், கூட்டணிப் பங்கீடாக 175 முதல் 200 தொகுதிகள் வரை போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதற்கான ஆரம்பகட்டப் பட்டியலையும் சமாஜ்வாதி கட்சியிடம் காங்கிரஸ் சமர்ப்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் (UPCC) கட்சித் தலைமை அண்மையில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக ஆராதனா மிஸ்ரா ‘மோனா’ நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயல் தலைவராக இம்ரான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் குறிப்பிட்ட வாக்கு வங்கிகளைக் கவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் போராட்டங்கள்
மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, பிலிபித் சதார் போன்ற தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டையும் அக்கட்சி கோரியுள்ளது.
தமிழ்நாட்டைப் போன்று உ.பியிலும் கூட்டணியில் உள்ள சவால்கள்
2022 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், காங்கிரஸ் தற்போது 125 முதல் 200 இடங்கள் வரை கோருவதை சமாஜ்வாதி கட்சித் தலைமை முழுமையாக ஏற்கவில்லை என கூறப்படுகிறது. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை (Winnability) பொறுத்தே தொகுதிப் பங்கீடு அமைய வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.
பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் வித்திடுமா
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் கேட்டதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. நள்ளிரவு வரை நீடித்த தொகுதி பங்கீட்டை முடித்து வந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பங்கீடு நிறைவடைந்ததாக செய்கை காட்டினார் அப்போது அது மிகவும் வைரலானது. தேர்தல் முடிந்த பின் தமிழ்நாட்டில் தவெக அதிக எண்ணிக்கையில் வெற்றிப் பெற்று காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் திமுகவை வீழ்த்தி வென்றுவிட்டோம் என்ற செய்கையை முதலமைச்சர் விஜய் தற்போது சட்டமன்றம் முதல் தலைமைச்செயலகம் வரை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source link
