ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் அரசு; அமைச்சர் கீர்த்தனா

-நமது நிருபர்-

சிவகாசியில் அமைச்சர் கீர்த்தனா பட்டாசு ஆலைகளுக்குச் சென்று தொழிலாளர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அவர் கூறியதாவது: சிவகாசியில் பட்டாசு தொழில் வளர்ச்சி மற்றும் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் ‘பைரோ பார்க்’ 100 ஏக்கரில் அமைக்கப்படும். அது அமைந்தால் சட்ட விரோதமாக பட்டாசு ரசாயன மூலப்பொருட்கள் விற்பனையாவதை கட்டுப்படுத்த முடியும்.

விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது. ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பட்டாசு தொழிலை இயந்திரமாக்கும் முயற்சியாக பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ‘பைரோ பார்க்கில்’ பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டாசு ஏற்றுமதி என்ற கனவை நிறைவேற்றும் பாதையாக அது நிச்சயமாக இருக்கும். ‘பைரோ பார்க் ‘எங்கு அமைகிறது, என்னென்ன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது என்பது குறித்து 2 மாத காலத்தில் முழுமையாக அறிவிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுப்பதில் முதல்வர் மிக தீவிரமாக இருக்கிறார். ரூ. 1 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு ஈர்த்துள்ளதை தொடர்ந்து ஜி .சி. சி., எனப்படும் தமிழகத்தில் உலகளாவிய திறன் மைய காரிடார் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

முந்தைய ஆட்சியில் வெளிப்படைத்தன்மை கிடையாது. டெண்டர் உள்ளிட்ட எந்த ஒரு நடைமுறையிலும் ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறினார்.

Source link