எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் அமெரிக்கா தீப்பற்றி எரியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த மாத தொடக்கத்தில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் வெற்றி, தோல்வி ஆட்சி அதிகாரத்தின் மீதான அதிகப்படியான செல்வாக்கைத் தீர்மானிக்கும் என்பதால் போட்டி கடுமையாக உள்ளது. எனவே, இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஆளும்கட்சியான குடியரசு கட்சிக்கு உள்ளது. அதே நேரத்தில், அரசு நிர்வாகத்தில் முடிவெடுப்பதில் இந்த தேர்தலின் வெற்றி, தோல்வி முக்கிய பங்காற்றுவதால், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்தச்சூழலில், ஆளும் கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிபர் ட்ரம்ப், ”ஐரோப்பிய நாடான பிரான்சில், தற்போது கடுமையான விலைவாசி மற்றும் தவறான குடியேற்றக் கொள்கைகளால் மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அங்குப் போராட்டங்கள் வன்முறை கலவரங்களாக மாறியுள்ளன. அதனால், கட்டிடங்கள் தீப்பற்றி எரிகின்றன. அங்கு நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது.
இந்த இடைக்காகத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் நிலையும் பிரான்சைப் போல மாறிவிடும். அமெரிக்காவும் தீப்பற்றி எரியும் சூழல் ஏற்படும். எனவே, நாட்டை காப்பாற்றப் பொதுமக்கள் அனைவரும் ஆளும் குடியரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ட்ரம்ப் தோல்வி பயத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், உள்நாட்டுப் பணவீக்கம் மற்றும் ஈரான் உடனான போர் பதற்றம் ஆகியவற்றைக் குறித்தும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
