நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு கேங்க்ஸ்டர் படமாக அமைந்து வசூலையும் வாரி குவித்துள்ளது. இதுவரை 5 நாள் நிலவரப்படி ரூ.500கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே படத்தில் இடம் பெற்ற மூர்த்தி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த பாத்திரத்தில் நாடோடிகள், ரஜினி முருகன் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்த நமோ நாராயணன் நடித்திருந்தார். இவரது நகைச்சுவை கலந்த மற்றும் படத்தில் ரஜினி கொடுக்கும் பில்டப் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில அவரை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சசிகுமாரும் நமோ நாராயணனை பாராட்டியுள்ளார். ஜெயிலர் 2 வெற்றி தொடர்பான அவரது பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “சூப்பர் ஸ்டார் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான். நெல்சன் மற்றும் ‘ஜெயிலர் 2’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, புதிய மைல்கல்லை உருவாக்கட்டும். எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெயிலர் பட முதல் பாகத்தின் வெற்றியின் போது தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசுக் கார் பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
SUPERSTAR IS ALWAYS SUPERSTAR#Jailer2
Heartiest congratulations to @Nelsondilpkumar and the entire team of Jailer 2 May this film shatter records, set new benchmarks
எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் 🚗 @sunpictures#superstar😍👍#NamoNarayana 👍 pic.twitter.com/mrqv98bt2A
