அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை சூப்பர் சோனிக் ஸ்டெல்த் போர் விமானம் எப்-35. லாக்ஹீட் மார்ட்டின் என்ற அமெரிக்க நிறுவனம் இதை தயாரிக்கிறது.
எப்-35 போர் விமானங்களை பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது.
நேதன்யாகு எதிர்ப்பு
அந்த வகையில் துருகிக்கு எப்-35 விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேதன்யாகு, துருக்கி ஆக்கிரமிப்பு எண்ணங்களைக் கொண்டுள்ளது. துருக்கிக்கு அதிநவீன எப்-35 போர் விமானங்களை வழங்குவது மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை சீர்குலைக்கும் என எச்சரித்தார்.
தற்போது அவர் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளார். ஈரான் விவகாரம் தொடர்பாக அவர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டிரம்ப் கருத்து
இதனிடையே ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பேட்டி அளித்த டிரம்ப் இடம், “துருகிக்கு எப்-35 விமானங்களை விற்க நேதன்யாகு எதிர்ப்பு தெரிவிக்கிறாரே?” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “நாங்கள் எதை விற்க வேண்டும் என்று யாரும் எனக்குச் சொல்ல முடியாது” என்றார்.
மேலும், “துருக்கி எனக்கு ஒரு மிகச்சிறந்த நட்பு நாடாக இருந்து வருகிறது. பல துறைகளில் அவர்கள் மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளனர்” என்று பாராட்டிய அவர், சிரியா விவகாரம் உட்பட பிராந்திய பிரச்சினைகளில் துருக்கியின் பங்களிப்பை புகழ்ந்தார்.
துருக்கி நாடு, இஸ்ரேலையோ அல்லது நேதன்யாகுவையோ பெரிதாக விரும்புவதில்லை என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், இருப்பினும் அமெரிக்கா – துருக்கி இடையேயான உறவு வலுவாக உள்ளது என்று கூறினார்.
துருக்கி – ரஷியா – அமெரிக்கா
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியதைத் தொடர்ந்து, டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தின் போது 2019ஆம் ஆண்டில் எப்-35 திட்டத்தில் இருந்து துருக்கி நீக்கப்பட்டது.
இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, எஸ்-400 கொள்முதல் காரணமாக அமெரிக்கா விதித்த தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாகத் தெரிவித்தார். மேலும் துருக்கிக்கு எப்-35 போர் விமானங்கள் வழங்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
