கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த சூழலில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் அவருடைய அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (29-10-26) காலை முதல் சோதனை நடத்தினர். அதே போல், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்கள், திமுக முன்னாள் எம்எல்ஏக்களான அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் மற்றும் திருச்சி, துறையூர் திமுக நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
7 மணி நேர லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நிறைவுக்குப் பிறகு கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த முறை 10 இடங்களில் சோதனை செய்தார்கள், இந்த முறை அதிக இடங்களில் சோதனை நடத்திருக்கிறார்கள். ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தம்பி மணிவண்ணனின் லேப்டாம் 2 மட்டும் எடுத்து போயிருக்கிறார்கள். நிறைய இடத்தில் கொலை, கொள்ளை நடக்கிறது.. சிறையில் இருந்து நிறைய பேர் தப்பித்துச் செல்கிறார்கள். சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்புவதற்காக கூட இந்த ரெய்டு நடந்திருக்கலாம்” என்று கூறினார்.
