நாட்டையே பெரும்பாடுபடுத்தி வருகிறது நாய்க்கடி சம்பவங்களும், ஆதனால் ஏற்படும் உயிரிழப்புகளும். தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சனை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் வெளியிட்டது.
அந்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில் அடைத்து வைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது. மேலும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதை பிடித்து இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்து உயர்நீதிமன்றங்களும் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கண்காணிக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இதனிடையே, தெருநாய்களால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி முன்பு இன்று (21-07-26) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக அறிக்கை தயாராக இருப்பதாகவும் அதை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘தெரு நாய்கள் பிரச்னை தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என அரசின் அறிக்கையில் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால், நேரில் எதுவும் தெரியவில்லை. நாய்க்கடி சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன, பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. உயர் நீதிமன்ற வளாகத்திலேயே நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது’ என தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்து இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு 1 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
