என்னடா இது! ரயில்வே நிர்வாகத்துக்கு வந்த சோதன… ரூ.1 குறைவாக ரீஃபண்ட் அனுப்பி ரூ.3,100 தண்டம் கட்டிய ஐ.ஆர்.சி.டி.சி

ரயில் டிக்கெட்டை ரத்து செய்தபோது, திரும்ப வழங்க வேண்டிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக வழங்கப்பட்ட விவகாரத்தில், கேரள பயணிக்கு அந்த ஒரு ரூபாயைத் திருப்பித் தருமாறு இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு (IRCTC) நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பயணிக்கு ரூ.3,100 இழப்பீடு வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

ஒரு ரூபாய்க்காக நுகர்வோர் ஆணையத்தை நாடிய பயணி

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், ஆகஸ்ட் 20-ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த பயணத்திற்காக, ஆகஸ்ட் 11, 2024 அன்று 553 ரூபாய்க்கு ஏசி த்ரீ-டயர் (AC three-tier) ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளார். ஆனால், பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கும் முன்னதாக, ஆகஸ்ட் 17 அன்று அந்த டிக்கெட்டை ரத்து செய்துள்ளார். இதையடுத்து, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) நிறுவனம் ரத்து கட்டணமாக 180 ரூபாயையும், 5 சதவீத ஜிஎஸ்டி (GST) தொகையாக 9 ரூபாயையும் பிடித்தம் செய்துள்ளது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 

பயணிக்குத் திரும்ப வழங்கப்பட வேண்டிய தொகை 341 ரூபாய் என்று குறிப்பிட்ட நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி 340 ரூபாயை மட்டுமே திருப்பி அளித்துள்ளது. இதனால் ஒரு ரூபாய் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் டிக்கெட்டை ரத்து செய்தபோது தனக்குத் திரும்ப வழங்கப்பட்ட தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருப்பதை அந்தப் பயணி கண்டறிந்தார். இதையடுத்து, தனக்குச் சேர வேண்டிய முழுத் தொகையை வழங்கவில்லை எனக் கூறி, அவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், இது தனக்குக் குழப்பத்தையும், மன உளைச்சலையும் தந்ததாகவும், நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தியாகவும் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட இந்த குழப்பம் மற்றும் மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், , நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தியதற்கு இன்னொரு ஒரு லட்சம் ரூபாயும், வழக்குச் செலவுகளுக்காக 5,000 ரூபாயும், தனக்கு வழங்க வேண்டிய அந்த ஒரு ரூபாயையும் சேர்த்து இழப்பீடாக தர வேண்டும் என்றும் கோரினார்.

அதிரடி உத்தரவு 

இந்தப் புகாரை விசாரித்த காசர்கோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் கிருஷ்ணன் கே மற்றும் உறுப்பினர் பீனா கே.ஜி. ஆகியோர் அமர்வு, ஐ.ஆர்.சி.டி.சி தரப்பு விளக்கத்தை நிராகரித்தனர். ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட நாளான 17.08.2024 முதல் பணம் வசூலாகும் வரை 9% வட்டியுடன் பயணிக்கு வழங்க வேண்டிய ஒரு ரூபாயைத் திருப்பித் தருமாறு ஐ.ஆ.ர்.சி.டி.சி-க்கு உத்தரவிட்டனர். மேலும், சேவை குறைபாட்டிற்காக இழப்பீடாக 100 ரூபாயையும், வழக்குச் செலவுகளுக்காக 3,000 ரூபாயையும் வழங்குமாறும் அதிரடியான உத்தரவை பிறப்பித்தனர். இந்த உத்தரவைப் பெற்ற 30 நாட்களுக்குள் இதனைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

முக்கியக் குறிப்பு:

பணத்தைத் திருப்பி அளிக்கும்போது ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும், அது ‘சேவையில் குறைபாடு’ எனக் கருதப்படலாம். எனவே, வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், அவர்களுக்குச் சேர வேண்டிய முழுத் தொகையையும் சரியாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

நுகர்வோர் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நுகர்வோர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம் (கேரளா: 1800-425-1550). அல்லது, உதவிக்கு ‘தேசிய நுகர்வோர் உதவி மையத்தின்’ (National Consumer Helpline) 1915 என்ற எண்ணை அழைக்கலாம்.

Source link