என்னா ‘அடி’… அபிஷேக் ‘சரவெடி’: 38 பந்தில் 113 ரன் விளாசல்

வெலிங்டன்: மூன்றாவது ‘டி–20’ போட்டியில் அபிஷேக் சர்மா 38 பந்தில் 113 ரன் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. தொடரை 3–0 என கைப்பற்றியது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு சவாலில் இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி நேற்று (அக். 27) வெலிங்டன், எச்.என்.ஆர்.ஒய்., மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

மிட்சல் அரைசதம்

நியூசிலாந்து அணி துவக்கத்தில் திணறியது. அர்ஷ்தீப் ‘வேகத்தில்’ டிம் செய்பர்ட் (2) வெளியேறினார். ஆடுத்து ஆலன், டேரில் மிட்சல் அசத்தினர். ஆலன், 40 ரன் எடுத்தார். அக்சர் படேல் ‘சுழலில்’ கிளன் பிலிப்ஸ் (17) சிக்கினார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 198/3 ரன் குவித்தது. மிட்சல் (89 ரன், 52 பந்து, 5X4, 5X6), பெவன் ஜேக்கப்ஸ் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

அதிரடி துவக்கம்

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ‘சரவெடி’ துவக்கம் தந்தனர். இருவரும் சேர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். ஜேக்கப் டபி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் வைபவ். தொடர்ந்து பைவப், அபிஷேக் தலா ஒரு சிக்சர் அடிக்க, முதல் ஓவரில் மொத்தம் 26 ரன் கிடைத்தன. மில்னே வீசிய அடுத்த ஓவரில் அபிஷேக் வரிசையாக 6, 6, 4 என விளாசினார். பிரேஸ்வெல் ஓவரில் (3வது) அபிஷேக்(4, 6, 4), சூர்யவன்ஷி (1X6) வெளுத்து வாங்க, 21 ரன் எடுக்கப்பட்டன. ஜேமிசன் ஓவரை (4வது) பதம் பார்த்த அபிஷேக்(4, 6, 4), 15 பந்தில் அரைசதம் எட்டினார். மறுபக்கம் டபி ஓவரில் சூர்யவன்ஷி (4, 4, 4, 6) விளாச, 18 ரன் கிடைத்தன. ‘பவர் பிளே’ (முதல் 6 ஓவர்) முடிவில் இந்தியா 118/0 ரன் குவித்தது. பிஷர் பந்தில் வைபவ், 45 ரன்னுக்கு (19 பந்து, 4X4, 4X6) அவுட்டானார்.

35 வயதில் சதம்

தனது அதிரடியை தொடர்ந்து அபிஷேக், பிஷர் ஓவரில் 2 சிக்சர் அடித்தார். ஜேமிசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அபிஷேக், 35 பந்தில், சர்வதேச ‘டி–20’ அரங்கில் 4வது சதம் எட்டினார். அபிஷேக் 113 ரன்னுக்கு (38 பந்து, 9X4, 11X6) ஜேமிசன் பந்தில் வெளியேறினார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (5) நிலைக்கவில்லை. சஞ்சு சாம்சன், 18 ரன் எடுத்தார். ஜேமிசன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நமன் திர், விரைவான வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 13.2 ஓவரில் 199/4 ரன் எடுத்து, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. நமன் திர் (4), திலக் வர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காவது போட்டி அக். 30ல் ஆக்லாந்தில் நடக்க உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்

நியூசிலாந்து 198/3 (20 ஓவர்)
பேட்டிங்
மிட்சல் 89(52)
ஆலன் 40(25)
பவுலிங்
அர்ஷ்தீப் 1/33 (4 ஓவர்)
அக்சர் 1/36 (4 ஓவர்)
இந்தியா 199/4 (13.2 ஓவர்)
பேட்டிங்
அபிஷேக் 113(38)
வைபவ் 45(19)
பவுலிங்
ஜேமிசன் 2/45 (3.2 ஓவர்)
சான்ட்னர் 1/17 (3 ஓவர்)
ரிசல்ட்: இந்தியா வெற்றி (6 விக்.,)

அதிவேக ரன் வேட்டை

சர்வதேச ‘டி–20’ அரங்கில் 100+ ரன் எடுத்த துவக்க ஜோடியில் நேற்று அதிக ரன் ரேட்டை (18.13) அபிஷேக்–வைபவ் பதிவு செய்து, உலக சாதனை படைத்தனர்.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில் நேற்று இந்தியா அதிவேகமாக 50 (2.2 ஓவர்), 100 ரன்னை (5 ஓவர்) நேற்று எட்டியது.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில் 1–6 ஓவரில் நேற்று அதிக ஸ்கோரை இந்தியா (118/0) பதிவு செய்தது.
* 190+ இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற அணிகள் பட்டியலில் இந்தியா (40 பந்து மீதம்) 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் எஸ்டோனியா (42 பந்து, எதிர், சைப்ரஸ், 2024, இலக்கு: 192) உள்ளது.
* நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ டி–20 தொடரை (2020, 2022, 2026) வென்றது.

முதல்வன்

‘டி–20’ அரங்கில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் அபிஷேக் சர்மா (11 சதம்) முதலிடம் பிடித்தார். அடுத்த இடத்தில் கோலி(10) உள்ளார். ஒட்டுமொத்தமாக 3வது இடம் பெற்றார். முதல் இரு இடங்களில் கெய்ல் (வெ.இ., 22 சதம்), பாபர் ஆசம் (பாக்., 13) உள்ளனர்.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் 2வது இடத்தை (தலா 4 சதம்) அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (இந்தியா), பில் சால்ட் (இங்கி.,) கரண்பிர் சிங் (ஆஸ்திரியா) பகிர்ந்து கொண்டனர். முதலிடத்தை (தலா 5 சதம்) ரோகித் சர்மா, மேக்ஸ்வெல் (ஆஸி.,) பகிர்ந்து கொண்டனர்.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில் அதிவேக சதம் அடித்தவர் பட்டியலில் (ஐ.சி.சி., முழு உறுப்பு நாடுகள்) அபிஷேக் 3வது இடத்தை (தலா 35 பந்து), மில்லர் (தெ.ஆ., எதிர், வங்கம், 2017), ரோகித் சர்மா (இந்தியா, எதிர், இலங்கை, 2017) உடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் அபிஷேக் சர்மாவே (30 பந்து, எதிர், ஆப்கன், 2026) உள்ளார்.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில் அதிவேக அரைசதம் அடித்தவரில் 3வது இடத்தை அபிஷேக் (15 பந்து) பெற்றார். முதலிடத்தில் யுவராஜ் சிங் (12 பந்து, எதிர், இங்கி., 2007) உள்ளார்.

150 சிக்சர்

சர்வதேச ‘டி–20’ அரங்கில் 150 சிக்சர் என்ற மைல்கல்லை எட்டிய 3வது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா. 70 போட்டியில் மொத்தம் 158 சிக்சர் அடித்துள்ளார். முதல் இரு இடங்களில் ரோகித் (205), சூர்யகுமார் (179) உள்ளனர்.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் 2வது இடத்தை (எதிர், ஆப்கன், நேற்று நியூசி.,க்கு எதிராக தலா 11 சிக்சர்) தன்னுடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்திலும் அபிஷேக் (13 சிக்சர், எதிர், இங்கி., 2025) தான் உள்ளார்.
* சர்வதேச ‘டி–20’ அரங்கில் முதல் பந்தில் அதிக முறை சிக்சர் அடித்தவர் பட்டியலில் அபிஷேக் (8 முறை) முதலிடம் பெற்றார்.
* ‘டி–20’ அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 10+ சிக்சர் அடித்தவர் பட்டியலில் அபிஷேக் சர்மா (7 முறை) 2வது இடம் பெற்றார். முதலிடத்தில் கெய்ல் (வெ.இ., 18 முறை) உள்ளார்.

Source link