“என்னை அறியாமல் கண்ணீர் வந்தது” – படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் விக்னேஷ்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய் நடித்த கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ஒரு வழியாக நேற்று (23.07.2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல்வராக முதல் படம், சினிமாவில் கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தைத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தை திரையில் பார்த்த அமைச்சர்களான முகமது பர்வேஸ், சம்பத்குமார், விக்னேஷ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டு அழுதனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதாவது நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கர்நாடகா அரசு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும் போது அதை பற்றி வாய் திறக்காத அமைச்சர்கள் திரையரங்குகிற்குச் சென்று படம் பார்த்து அழுகின்றனர் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் அடிப்படை பிரச்சனைகள் இருக்கும் போது தவெக அமைச்சர்கள் படம் பார்த்து அழுது ரீல்ஸ் போடுகிறார்கள் என விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் இன்று (24-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் பிரேமலதா விஜயகாந்த் வைத்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நான் அமைச்சராக இல்லாமல் சொல்கிறேன். இது ஒவ்வொருவருக்குமான ஒரு உணர்வு தான். நாங்கள் சின்ன வயதில் இருந்தே விஜயின் படங்களை பார்த்து வளர்ந்தவர்கள் தான். இப்போது நான் அமைச்சர் தான். ஒவ்வொரு வருடமும் ஒரு முறை திரையில் பார்க்கும் ஒரு முகம். எல்லோருக்குள்ளேயும் ஒரு குழந்தை தன்மை இருக்கும். எல்லோருக்குள்ளேயும் ஒரு ரசிக தன்மை இருக்கும். அப்படி விஜய்யை நான் ரசித்திருக்கிறேன். எனக்கு அவர் அறிமுகமானது திரையில் பார்த்து தான். இனிமேல் அந்த திரையில் வரமாட்டார் என்று நினைக்கும் போது வந்த உணர்ச்சி அது. நான் அழுததை எப்படி வீடியோ எடுத்தார்கள் என தெரியவில்லை. ஆனால் அந்த கண்ணீர் என்னை அறியாமல் வந்தது தான். இதை பற்றி விவாதிக்க ஏதாவது பிரோஜனம் இருக்கிறதா?” என்று கூறிச் சென்றார்.

Source link