என் குழந்தையாக இருந்தால்? – இளைஞர்களுக்கு ஆதரவாக அபிராமி!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் ஜனதா கட்சியின் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்கும் நோக்கில் காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, தடியடி தாக்குதல், குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதனிடையே ராப் பாடகர் தெருக்குரல் அறிவு சென்னை தலைமைச் செயலகத்தின் முன் பாடல் பாடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் உட்பட அவருடன் வந்த நான்கு பேரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பின்பு விடுவிக்கப்பட்டனர். இதனிடையே காவல்துறையின் வன்முறைக்கு எதிராகவும், அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்கவும் நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசாத் தர்ணா செய்து வருகிறார். 

டெல்லியில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைத்துறையினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், லெனின் பாரது உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் நடிகை அபிராமி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஜந்தர் மந்தரில் நடப்பதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அங்கு வெயிலில் நின்றுகொண்டு, தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்று கெஞ்சும் இளைஞர்களைப் பார்க்கிறேன். நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன், ஒருவேளை இது என் குழந்தையாக இருந்தால்? அவர்கள் பல வருடங்கள் படித்தார்கள். விதிகளைப் பின்பற்றினார்கள். ஆனால் ஏமாற்றப்பட்டார்கள். பிறகு, அதை அமைதியாகச் சொல்வதற்காக டெல்லிக்குச் சென்றார்கள். அங்கே தடியடியையும் மௌனத்தையும் மட்டுமே எதிர்கொண்டார்கள்.

எல்லா பதில்களும் என்னிடம் இல்லை. ஆனால், ஒருவர் தன் கடமையில் நிற்பது முக்கியம் என்பதை நம்பி என் குழந்தை வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 



Source link