தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுளானா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அசன் மவுலானா வெற்றி பெற்றார்.2021 தேர்தல் செலவுக் கணக்கை முறையான ஆதாரங்களுடன் தாக்கல் செய்யாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட ரூ.30 லட்சம் என்ற உச்சவரம்பை மீறி அசன் மவுலானா தேர்தல் செலவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட அசன் மவுலானா தகுதியற்றவர் எனத் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.
விளம்பரச் செலவு சர்ச்சை
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அசன் மவுளானா கூறுகையில்,2021 சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வந்திருந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் விளம்பரங்கள் அளிக்கப்பட்டன. அந்த விளம்பரச் செலவை தனது சொந்தத் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கூறுவது முற்றிலும் நியாயமற்றது.
அமித் ஷா பிரசாரம் சுட்டிக்காட்டி ஒப்பீடு
அதே தேர்தலில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்த போது, மேடையில் இருந்த 5 பாஜக வேட்பாளர்களுக்கும் பிரசாரச் செலவு பிரிக்கப்பட்டுப் கணக்கிடப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி பங்கேற்ற மேடையில் தன்னைத் தவிர மேலும் 4 வேட்பாளர்கள் இருந்தும், அந்த விளம்பரச் செலவு முழுவதையும் தன் கணக்கிலேயே தேர்தல் ஆணையம் சேர்த்துள்ளது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை ஏன்?
தேர்தல் செலவுக் கணக்கு குறித்த முடிவை ஒரு வருடத்திற்குள் எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தின் விதிகளும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு
ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வந்ததால் ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்திய நீதித்துறையின் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக அசன் மவுலானா தெரிவித்துள்ளார்.
Source link
