தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை, திமுக முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் சிறையில் சந்தித்து நலம் விசாரித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரகுபதியும் சிறைக்கு வந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது. ஜூலை 27-ம் தேதி மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
சந்திப்பிற்கு பிறகு பாளையங்கோட்டை சிறை வாசலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரகுபதி, பொதுக்கூட்டத்தில் பேசும்போது எலும்பை முறித்து விடுவேன் என்று கூறியது பேச்சுவாக்கில் வந்த வார்த்தை மட்டுமே; அது குற்றமாகாது. ஆனால், டி.எஸ்.பி மூலம் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்து இந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தைப் பார்த்து யாரும் கண்ணீர் விடவில்லை. ஆனால் இன்று ‘ஜன நாயகன்’ படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் விடுகிறார்கள். நம்முடைய சட்டப்பேரவை தற்போது ஒரு திரைப்படக் கொட்டகையாக மாறி இருக்கிறது. இது மக்களை காப்பாற்றும் அரசு அல்ல, சினிமா பார்க்கும் அரசு. முதல்வர் பேசும்போது சட்டப்பேரவை கதவுகளை மூட வேண்டும் என்று கூறுவது உரிமை மீறல் இல்லையா? கதவை மூடுவதற்கு யாருக்கு என்ன உரிமை உள்ளது? ‘எலும்பை முறிப்பேன்’ என்று சொன்னது மட்டும் குற்றமா, முதல்வர் கதவைச் சாத்தச் சொல்வது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ரகுபதி, அவையில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும்போது வெளிநடப்பு செய்ய உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டதோடு, பேரவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகச் சாடினார். வெள்ளைக்காரன் ஆட்சியில் கூட பொது மக்களுக்கு பேசுவதற்கு உரிமை இருந்தது. ஆனால், தற்போதைய விஜய் ஆட்சியில் பேசுவதற்கு உரிமை இல்லை; அரசை விமர்சனம் செய்தாலே வழக்கு போடும் நிலைதான் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள் சூறையாடப்படும் ஆட்சியாக இது இருக்கிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட உள்ளதற்குக் காரணம், ஆட்சியாளர்கள் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாகச் செயல்படுவதுதான். பாஜகவை எதிர்த்து உண்மையான அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். நாங்கள் எப்போதுமே கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ரகுபதி, நீண்டநாட்களாக போராடி வரும் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது. அதனால்தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
