இன்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய கருத்துகள், திமுக கூட்டணிக்குள் மீண்டும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணி உடைந்ததற்கு திமுகவே காரணம் என்றும், கூட்டணி கட்சிகளை முறையாக நடத்தாததே முக்கிய காரணம் என்றும் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
திமுக கூட்டணி உடைந்தது ஏன்?
பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் பயணித்தவிடுதலை சிறுத்தைகள் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளது. இதற்கிடையே, கூட்டணி மாற்றம் குறித்து திருமாவளவன் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் பேசிய திருமாவளவன், திமுக கூட்டணி உடைந்ததற்கு திமுகவே காரணம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை திமுக முறையாக நடத்தவில்லை என்றும், அவ்வாறு நடத்தியிருந்தால் கூட்டணி உடைந்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யை குறைத்து மதிப்பிட்ட திமுக ?
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வளர்ச்சியை திமுக கணிக்கத் தவறிவிட்டதாகவும், விஜய்யை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
கரூர் சம்பவத்தை குறிப்பிட்ட அவர், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் அறிவுறுத்தியதாகவும், ஆனால் நடவடிக்கை எடுப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கருத்துகளும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
விஜய் ஆட்சிக்கு ஆதரவு ஏன்?
ஒரு கட்டத்தில் விஜய்யை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என விமர்சித்திருந்த திருமாவளவன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்திருப்பதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார். விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகங்களின் அடிப்படையிலும், இடதுசாரிகளின் முடிவை கருத்தில் கொண்டும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதா, இல்லையா என்பது குறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா ?
இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அக்டோபர் 6ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் தனித்தொகுதிகள் என்பதால், திருமாவளவனின் இன்றைய பேச்சு தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களிடையே அக்கட்சிக்கு நீண்டகால அரசியல் அடித்தளம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தனித்தொகுதிகளில் திருமாவளவனின் கருத்துகள் திமுகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்குமா என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
திமுகவின் சாதிய பிம்பம் வலுப்படுகிறதா?
திமுக மீது ஏற்கனவே சாதி ரீதியான அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தங்களை திமுக முறையாக நடத்தவில்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது அந்த விமர்சனங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல், தனக்கு பதவி ஆசை இல்லை என்றும்திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக அறிவித்து பின்னர் பின்வாங்கிய சூழலில், தாம் எம்.எல்.ஏவாக இருந்தாலும் அமைச்சராகும் ஆசை இல்லை என்றும் அவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
திமுகவில் நடப்பது என்ன? உள்ளுக்குள் நடக்கும் கோஷ்டி மோதல்?- deva
தற்போது தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவனின் இந்த கருத்துகள், குறிப்பாக தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் திமுகவுக்கு எதிராக எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அரசியல் வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Source link
