“எல்லா நடிகர்களும் கட்சி தொடங்கட்டும், மக்கள் முடிவு செய்வார்கள்”-முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, நடிகர் தனுஷின் அரசியல் இயக்கம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

அண்மையில் நடிகர் தனுஷ் மக்கள் இயக்கம் தொடங்கியிருப்பது மற்றும் அவர் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அழைப்பு விடுப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். ”விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா? தமிழ்நாடு முழுக்க உள்ள எல்லா நடிகர்களும் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கி வரட்டும். அடுத்த தேர்தலில் பல நடிகர்களின் சின்னங்கள் போட்டியிடும் போதுதான் யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது, யார் மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள் என்பது தெரியவரும்.

தனுஷ் இன்னும் முழுமையாகக் கட்சி ஆரம்பிக்காமல் மக்கள் இயக்கம் மட்டுமே தொடங்கியுள்ளதால், யாருடன் சேருவது அல்லது தனித்து நிற்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில், விராலிமலை தொகுதி வேட்பாளர் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு பயந்தாங்குளி.

மேடையில் ஒரு பேச்சும், பத்திரிகையாளர்களைப் பார்த்தால் ஒரு பேச்சும் பேசும் அவரது வார்த்தைகளுக்கு மக்கள் மத்தியிலும், அவரது சொந்தக் கட்சியிலுமே மதிப்புக் கிடையாது. திருமயம் தொகுதிக்குட்பட்ட தொலையானூரில் 2 கோடி 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கொன்னையூரில் 1 கோடி 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகளை, தற்போதைய உணவுத்துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர்கள் தமக்கு எவ்வித அழைப்பும் விடுக்காமல், தொலைபேசியில் கூடத் தெரிவிக்காமல் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார்.

எதிர்க்கட்சி மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து ரகசியமாக அரசு விழாக்களை நடத்தும் இந்த வெட்டி ஆட்சியை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குப் பதிலடியாக இனி தொகுதி நிர்வாகத்தைக் கலந்தாலோசிக்காமல் விழாக்கள் நடத்தப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய மறியல் மற்றும் அறப்போராட்டம் வெடிக்கும்.

ரேஷன் அரிசி மட்டுமே சாப்பிடுவதாக கூறும் உணவுத்துறை அமைச்சர், தங்களின் கடந்த கால ஆட்சியில் வழங்கப்பட்ட தரமான அரிசிக்குத் தரச்சான்றிதழ் கொடுத்ததற்கு நன்றி. தற்போதைய ஆட்சியில் சன்ன ரக அரிசி என்று விளம்பரம் செய்துவிட்டு வெறும் 5 கிலோ மட்டுமே வழங்குகிறது. அதுவும் அனைத்துக் கார்டுதாரர்களுக்கும் முழுமையாகக் கிடைப்பதில்லை. இது வெறும் ‘ரீல்ஸ்’ மற்றும் ‘போஸ்’ கொடுக்கும் வெட்டி விளம்பர ஆட்சி” என்றார்.