உலகளவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று (ஜூலை 23) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. படம் ரிலீஸானதை ஒட்டி அதிகாலை முதலே திரையரங்கு வளாகங்களில் விஜய் ரசிகர்கள் ஆண்களும் பெண்களுமாகத் திரண்டு வந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். திரையரங்குகளின் வாசலில் தாரை தப்பட்டை முழங்க, டிஜே இசையுடன் ஆட்டம்பாட்டு என ரசிகர்கள் கோலாகலமாகத் திருவிழா போலக் கொண்டாடினர். அதுமட்டுமின்றி, பிரம்மாண்டமான கட்-அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்வதும், சரவெடிகளை வெடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுமாக திரையரங்கப் பகுதிகள் களைகட்டின.
ஆனால், இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையே சில ரசிகர்கள் செய்த முகம் சுளிக்கும் விபரீதச் செயல்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திருச்சியில் உள்ள ஒரு திரையரங்கின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த விஜய்யின் கட்-அவுட் முன்பாக நபர் ஒருவர், “இது நம்முடைய ஆட்சி, யார் கேப்பாங்கன்னு பார்க்கலாம் வாங்க” என்று சவால் விடும் வகையில் பேசிக்கொண்டே, கோழியின் கழுத்தை அறுத்துப் பலியிட்டுள்ளார். பின்னர் அதிலிருந்து பீறிட்டு வந்த ரத்தத்தை விஜய்யின் கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி பலரையும் பதற வைத்துள்ளது.
ரசிகர்களின் இந்த அத்துமீறிய மற்றும் அருவருக்கத்தக்க செயலுக்குச் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே, இந்தச் சம்பவத்திற்குக் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது, “இதெல்லாம் என்ன மனநிலை என்று தெரியவில்லை..? திருச்சியில், தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் காண வந்த ரசிகர் ஒருவர் கட்அவுட் முன்பாக சேவலை அறுத்து இரத்தம் தெறிக்க அதனை பேனரில் படும்படி செய்த காணொளியானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தவெக அரசு பதவியேற்ற நாளிலிருந்து நடைபெறுகிற சம்பவங்களைப் பார்த்தால் இதுபோன்ற செய்கைகளில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையாகவே அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள்தானா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, மதுபானத்தில் அபிஷேகம் செய்வது போன்ற செயல்கள் காலங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் நேற்று கொண்டாட்டத்தின் உச்சமாக சேவலை அறுத்து குருதி தெறிக்க பலியிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டாடுவதற்கு மரம் நடுவது, ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் விடுத்து தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கும் தவறான உதாரணமாகி விடும். இவர்களைப் போன்றவர்கள் சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை எப்போது உணரப் போகிறார்களோ? இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசையும், திரைத்துறை சார்ந்தவர்களையும் வலியுறுத்துகிறேன். ” என்று பதிவிட்டுள்ளார்.
