புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் மக்களவையில் கோடைக்காலத்தில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, எல் நினோ உள்ளிட்ட வானிலை மாற்றங்களால் உருவாகும் சவால்கள், நிலக்கரி கிடைப்புத் தன்மை, மின்சார விநியோகப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு மற்றும் நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய அரசின் மின்துறை மாண்புமிகு அமைச்சர் மனோகர் லால் விரிவான பதிலை அளித்துள்ளார்.
நாட்டில் போதுமான அளவில் மின்சாரம் கிடைப்பதாகவும், 2026 ஜூன் நிலவரப்படி நாட்டின் மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் 548.86 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 2014 ஏப்ரல் முதல் 324.7 ஜிகாவாட் புதிய மின் உற்பத்தித் திறன் சேர்க்கப்பட்டதன் மூலம் மின் பற்றாக்குறை நிலை நீக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் 2,18,267 சுற்று கிலோமீட்டர் மின் பரிமாற்றக் கோடுகள், 9,47,405 எம்.வி.ஏ. மின்மாற்றுத் திறன் மற்றும் 84,390 மெகாவாட் இடைமாநில மின் பரிமாற்றத் திறன் உருவாக்கப்பட்டுள்ளதால், மொத்த இடைமாநில மின் பரிமாற்றத் திறன் 1,20,340 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது.
எல் நினோ தாக்கத்தால் மின்சாரத் தேவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரை உச்சபட்ச மின் தேவை கடந்த ஆண்டைவிட சுமார் 12 சதவீதம் உயர்ந்துள்ளது. 2026 மே மாதத்தில் 270.8 ஜிகாவாட் என்ற நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்ச உச்ச மின் தேவை வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதுடன், 2026 ஜூலை மாதத்தில் அகில இந்திய உச்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை இரண்டு முறை கடந்த போதிலும் அவையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டன. மேலும், 2026 ஜூலை மாதத்தில் 103.7 ஜிகாவாட் (சூரிய மின்சாரம் – 75 ஜிகாவாட்; காற்றாலை – 28.7 ஜிகாவாட்) என்ற சாதனை அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி பதிவாகியுள்ளது.
தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய போதுமான நிலக்கரி கையிருப்பு, எரிபொருள் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத் திறன் மேம்பாடு, அனைத்து மின் உற்பத்தி வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்துதல், நீர்மின் உற்பத்தியை உச்சநேரத் தேவைக்கேற்ப திட்டமிடுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பேட்டரி மின் சேமிப்பு அமைப்புகளை விரைவாக மின் வலையமைப்புடன் ஒருங்கிணைத்தல், வேளாண் மின் தேவையை பகல்நேர சூரிய மின் பயன்பாட்டிற்கு மாற்றுதல், எரிசக்தி சிக்கன நடவடிக்கைகளை ஊக்குவித்தல், நிலக்கரி விநியோகத்தை மின்துறை, நிலக்கரித் துறை, ரயில்வே உள்ளிட்ட துறைகள் இணைந்து தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் உச்ச மின் தேவைக் காலங்களில் அனல்மின் நிலையங்களின் பராமரிப்பை குறைத்தல் உள்ளிட்ட குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2026 ஜூலை 18 நிலவரப்படி அனல்மின் நிலையங்களில் 41.4 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதால், 85 சதவீத நிலைய சுமை காரணி அடிப்படையில் 13 நாட்களுக்கு போதுமான இருப்பு உள்ளது.
தீன்தயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனா, ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி சஹஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா (சௌபாக்யா) ஆகிய திட்டங்களின் கீழ் ₹1.85 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 18,374 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதுடன், 2.86 கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு அளிக்கடைந்துள்ளது. கிராமப்புறங்களில் சராசரி மின்விநியோக நேரம் 12.5 மணி நேரத்திலிருந்து 22.6 மணி நேரமாகவும், நகர்ப்புறங்களில் 22.1 மணி நேரத்திலிருந்து 23.4 மணி நேரமாகவும் உயர்ந்துள்ளது. தேசிய அளவில் மின் விநியோக நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு 22.62 சதவீதத்திலிருந்து 15.04 சதவீதமாக குறைந்துள்ளதுடன், ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி வழங்கல் செலவு மற்றும் வருவாய் இடைவெளி ₹0.78 இலிருந்து ₹0.06 ஆக குறைந்துள்ளது.
மேலும், 2025 ஜூலை 29 அன்று நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 51.5 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டதுடன், 2025-26ஆம் ஆண்டில் 64,695 மெகாவாட் புதிய மின் உற்பத்தித் திறன், அதில் 50,905 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் சேர்க்கப்பட்டது. 2026 ஜனவரி 14 அன்று உலகின் மிகப்பெரிய ஒத்திசைவு தேசிய மின் வலையமைப்பாக நாடு உருவெடுத்ததுடன், நாட்டின் மின் பரிமாற்ற வலையமைப்பு 5.08 லட்சம் சுற்று கிலோமீட்டர் பரிமாற்றக் கோடுகளையும், 1,469 ஜிகா வோல்ட் ஆம்பியர் மொத்த மின்மாற்றுத் திறனையும் எட்டியுள்ளது. 2025-26ஆம் ஆண்டில் மின்சாரப் பற்றாக்குறை பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. கோப்-26 மாநாட்டில் அளித்த உறுதிப்பாட்டின்படி, 2030ஆம் ஆண்டிற்கான தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 50 சதவீதத்தை புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து பெறும் இலக்கை 2025ஆம் ஆண்டிலேயே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக நாடு எட்டியுள்ளது.
நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறன், 2035-36ஆம் ஆண்டில் 786 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத மின் உற்பத்தித் திறன் மற்றும் 315 ஜிகாவாட் நிலக்கரி மின் உற்பத்தித் திறன், 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுமின் திறன், 100 ஜிகாவாட் நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்கள், 80 ஜிகாவாட் பேட்டரி மின் சேமிப்பு அமைப்புகள் மற்றும் 94 ஜிகாவாட் நீரேற்று மின் சேமிப்புத் திறன் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பசுமை ஆற்றல் வழித்தடத் திட்டம், கடல்சார் காற்றாலைத் திட்டம், உயர் திறன் சூரிய ஒளிமின்னழுத்த தொகுதிகளுக்கான உற்பத்தி ஊக்கத் திட்டம், மேம்பட்ட வேதியியல் மின்கல சேமிப்பு, மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பு, பேட்டரி மின் சேமிப்பு அமைப்புகளுக்கான நிதி இடைவெளி நிரப்பும் திட்டம், நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தையும் வலுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சர் மனோகர் லால், புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் எழுப்பிய நட்சத்திர கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
