“எஸ்.எஸ்.ஆர். நடவடிக்கைகளைத் தொடங்குவது நியாயமானதாக இருக்காது” – எஸ்.எஸ். பாலாஜி கருத்து!

வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தச் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று (23.10.2026) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த எஸ்எஸ்ஆர் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்பாக, நாடு முழுவதும் எஸ்ஐஆர் மூலம் ஜனநாயகப் படுகொலை நடந்திருக்கிறது. 

அதற்குப் பொறுப்பேற்று, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்திப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த எஸ்ஐஆரின் தாக்கம் நாடு முழுவதும் இருக்கிறது என்று சொன்னாலும், குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 97 லட்சம் வாக்காளர்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நீக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில், எஸ்ஐஆர் நடவடிக்கை போன்ற ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு எந்த வகையிலும் சட்டப்பூர்வமான அதிகாரமோ அங்கீகாரமோ இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மிகத் தெளிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

இதில் குறிப்பாக, இந்த 97 லட்சம் வாக்காளர்களில் 67.64 லட்சம் வாக்காளர்கள்  இல்லை  அல்லது இடம் மாற்றம் (Absent/Shifted) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இல்லை  அல்லது இடம் மாற்றம் என்று சொன்னால், அவர்கள் தகுதியான வாக்காளர்கள்தான். அவர்கள் தகுதியிழந்த வாக்காளர்கள் இல்லை. அப்படியானால், இல்லை அல்லது இடம் மாற்றம் என்று சொல்லக்கூடிய இந்த வாக்காளர்கள் வேறு எங்கே வாக்களிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் அல்லது வேறு எங்கே வாக்காளர்களாக இருக்கிறார்கள் போன்ற விவரங்களையும் ஆதாரங்களையும் தேர்தல் ஆணையம் இந்த நிமிடம்வரை வெளியிடவில்லை.

ஊடுருவல்காரர்களை (Infiltrators) கண்டுபிடிப்பதற்கான ஒரு நடவடிக்கைதான் இந்த எஸ்ஐஆர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது இதுவரை ஊடுருவல்காரர்கள் என்று சொல்லக்கூடிய எத்தனை பேரைத் தேர்தல் ஆணையம் கண்டுபிடித்திருக்கிறது? எந்த மாதிரியான நடவடிக்கையின் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கண்டறியப்பட்டிருக்கிறார்கள்?. இதுபோன்ற விவரங்கள் அடங்கிய சட்டப்பூர்வமான ஆதாரங்கள் எதையும் இந்த நொடிவரை தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தவில்லை. மக்களுக்கு அது தொடர்பான தகவல்களையும் அளிக்கவில்லை.

ஆகவே, வெளிப்படைத்தன்மையோடு, ஊடுருவல்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்களைப் பற்றிய தகவல்களைத் தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கிட வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான விவரங்களை வழங்கி, சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். ஏற்கெனவே, எஸ்ஐஆரில் நிறையப் பேருடைய வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிற சூழலில், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எப்போதும் போல இந்த எஸ்எஸ்ஆர் என்பது தேர்தல் ஆணையம் வழக்கமாகச் செய்கின்ற தொடர் நடவடிக்கைதான், எதுவுமே நடக்காதது போன்ற இயல்பான நடவடிக்கைதான் என்ற வகையில், இன்றைக்கு இந்த எஸ்எஸ்ஆர் நடவடிக்கையைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அனைவரின் விவரங்களையும் வாக்குச்சாவடி வாரியாகத் தொகுத்து, மென்பிரதியாக (Soft Copy) அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அல்லது செய்து முடிக்காமல் இந்த எஸ்எஸ்ஆர் நடவடிக்கையைத் தொடங்குவது எந்த வகையிலும் பொருத்தமற்றது; அர்த்தமற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பான கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்காமலும், நீக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தாமலும் எஸ்எஸ்ஆர் நடவடிக்கைகளைத் தொடங்குவது நியாயமானதாக இருக்காது.

எனவே, இந்தக் காரணங்களை எல்லாம் குறிப்பிட்டு, விசிக தலைவர் திருமாவளவனின் கடிதத்தைத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வழங்கி, இந்தக் கூட்டத்திலிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். மிகக் குறிப்பாக, தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கக்கூடிய எஸ்ஐஆர் குளறுபடி ஜனநாயகப் படுகொலை தொடர்பான விளக்கங்களையும் விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தாமல், தெரிவிக்காமல் எஸ்எஸ்ஆர் நடவடிக்கையைத் தொடரக் கூடாது என்ற நிலைப்பாட்டில்தான் நாங்கள் எங்களுடைய வெளிநடப்பைச் செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.