தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்குப் பிறகு, அம்மாநிலத் தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று (27-10-26) வெளியிட்டுள்ளது. இதன்படி, முந்தைய பட்டியலிலிருந்த 1 கோடிக்கும் அதிகமான(1,08,76,625) வாக்காளர்களின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 30-ஆம் தேதி கர்நாடகாவில், இந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திருத்தப் பணிகளுக்கு முன் 5,54,32,314 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 4,54,55,689 ஆகக் குறைந்துள்ளது.
இந்த இறுதிப் பட்டியலில் 2,25,40,493 ஆண் வாக்காளர்களும், 2,29,12,355 பெண் வாக்காளர்களும், 2,841 மூன்றாம் பாலினத்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும், 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 6.83 லட்சத்துக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவிலான பெயர்கள் நீக்கப்பட்டதற்கான பிரதான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் நிரந்தரமாக வேறிடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், வாக்காளர்கள் முகவரியில் இல்லாதவர்கள் எனவும், உயிரிழந்த வாக்காளர்கள் எனவும் காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
