எஸ்.பி வேலுமணி மீதான ரூ 98 கோடி ஊழல் வழக்கில் அறப்போர் 8 ஆண்டு போராட்டம்: ஆட்சிகள் மாறினாலும் நிலமை இதுதான்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ரூ.98 கோடி ஊழல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிரான அனுமதி கோப்பை தாமதித்தது தொடர்பாக ஓய்வுபெற்ற பொதுத்துறைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக அறப்போர் இயக்கம் சந்தித்து வரும் பின்னடைவுகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் விவரித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ரூ.98 கோடி சென்னை – கோவை மாநகராட்சி டெண்டர் ஊழல் வழக்கில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிக்கும் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தாமதித்து வந்த மாநில பொதுத்துறைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சிகள் மாறினாலும் நிலவரம் மாறவில்லை என்றும், இந்த ஒரு வழக்கை நகர்த்துவதற்காகவே 18 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மற்றும் 13 பொய் எஃப்.ஐ.ஆர்-களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்றும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், எஸ்.பி. வேலுமணி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்துள்ள நீதிபதி, சட்டமன்றத் தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “அறப்போர் வழக்கில் பொதுத்துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதன் பின்னணி என்ன ?” என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெக்கடேசன் முகநூலில் பதிவிட்டிருப்பதாவது: “சென்னை கோவை மாநகராட்சி ஊழல் மீது அறப்போர் புகார்: செப்டெம்பர் 2018
நெடிய நீதிமன்ற சட்ட போராட்டத்திற்கு பிறகு டி.வி.ஏ.சி எஃப்.ஐ.ஆர்: ஆகஸ்ட் 2021

மீண்டும் சட்ட போராட்டத்திற்கு பிறகு, அக்டோபர் 2023-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணை 
ரூ.98 கோடி குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது : டிசம்பர் 2023
முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் பொறியாளர்களுக்கு நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி கொடுத்த மாதம் : ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024.

ஆனால் வழக்கில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான  (விஜய்கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் , கந்தசாமி ஐ.ஏ.எஸ்) நீதிமன்ற அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான கோப்பை தமிழ்நாட்டின் பொதுத்துறை செயலர் 2024 ஜனவரி முதல் கோப்பையை அனுப்பாமலேயே வைத்து இருந்தார்.

அறப்போர் 2024 ஏப்ரலில் முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

2025 இல் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறோம். அந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 2025 இல் விசாரணைக்கு வந்த பிறகு தான் பொதுத்துறை செயலர் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கோப்பை ஆகஸ்ட் 30 2025 மத்திய அரசுக்கு அனுப்புகிறார். 
மத்திய அரசு மொழிபெயர்ப்பு கேட்டு செப்டெம்பர் 1 திரும்ப அனுப்புகிறது. 

மொழிபெயர்ப்பு முடித்து நவம்பர் 7, 2025 அன்று மாநில அரசு பொதுத்துறை மத்திய அரசுக்கு அனுப்புகிறது. 
மீண்டும் பிப்ரவரி 4, 2026, மத்திய அரசு சில விளக்கங்களை கேட்கிறது. விளக்கத்தை 27 பிப்ரவரி 2026 அன்று லஞ்ச ஒழிப்பு துறை மாநில பொதுத்துறை அதிகாரிக்கு அனுப்பி விடுகிறார்கள். 

மீண்டும் பிப்ரவரி 2026 முதல் இன்று வரை கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பாமல் பொதுத்துறை செயலர் இழுத்து வருகிறார். 

மாநில அரசு எப்பொழுது மத்திய அரசுக்கு அனுப்பும் ? இதற்கு பிறகு மத்திய அரசு எத்தனை காலம் எடுத்து கொள்ளுமோ ? அதற்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் . அதற்கு பிறகு நீதிமன்ற விசாரணை நடைபெற வேண்டும். அதற்கு பிறகு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற மேல்முறையீடுகள் நடைபெறும் .

இந்த இடத்திற்கு வரவே இவ்வளவு போராட்டங்கள். இந்த புகாருக்காக அறப்போர் சந்தித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் – 18, பொய் எஃப்.ஐ.- 13 .” என்று ஜெயராம் வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

Source link