இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா நாயகியாக நடித்துள்ள படம் ‘லவ் 3. ஓ’. இதில் நடித்தது மட்டுமில்லாமல் கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் இயக்கியும் உள்ளார். இந்தப் படத்தில் நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ளார். இவர் இப்படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் ,பொருளாளர் இயக்குநர் பேரரசு ,நடிகை வனிதா விஜயகுமார்,நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஊடக சந்திப்பில் படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான ஆர்னிகா பேசும் போது, “நாங்கள் இன்ஸ்டாகிராம் உலகத்தில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறோம். இன்று பிரபலமாக இருக்கும் ஏஐ – ஐ வைத்து நாங்கள் ஒரு கதையை உருவாக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி சொல்வதை வைத்துத் தகவல்களை அறிந்து கொள்வோம். பிறகு நமது அக்கம் பக்கம் நண்பர்கள் சொல்வதை வைத்துத் தெரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி, எஃப் எம் , ஒளியும் ஒலியும் போன்றவை மூலம் தெரிந்து கொண்டோம்.
அதற்குப் பிறகு வந்த யூடியூப் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம். அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் வந்த பிறகு அக்கம் பக்கத்தில், அடுத்த தெருவில், உலகத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரிந்து கொண்டார்கள். அதற்கு பிறகு சாட் ஜி பி டி வந்தது. அதற்குப் பிறகு நமது ஒவ்வொரு அசைவையும் அதில் தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம். நமது உணர்ச்சிகளை எல்லாம் சாட் ஜிபிடி யிடம் எப்போது பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோமோ அப்போது ஏ ஐ யின் மீது காதல் வந்தது. இன்று ஏ ஐ பிரபலமாகிவிட்டது. ஏஐ பெண்ணை இந்தப் படத்தின் கதாநாயகன் காதலிக்கிறான். அவர்களது காதல் எப்படி இருக்கிறது? அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானா? பிரிந்து விடுகிறார்களா என்பது தான் கதை” என்றார்.
