“ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு கேட்டுத்தான் இந்தி கற்றுக்கொண்டேன்” – யஷ்

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து சென்னையில் விளம்பர நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

இதில் யஷ் கலந்து கொண்டு பேசுகையில், “யாராவது பாடுவதையோ அல்லது இசைக்கருவி வாசிப்பதையோ பார்க்குப்போதெல்லாம் அந்த இசைக்கு முன்னால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று எனக்குத் தோன்றும். ஒரு படத்தில் நடிகர்களாகிய நாங்கள், மற்றவர்கள் எழுதிய வசனங்களைப் பேசுகிறோம். எங்களைப் படம்பிடித்து, திரையில் அழகாகக் காட்டுகிறார்கள். இயக்குநர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள். கதையாசிரியர் கதையை உருவாக்குகிறார். ஆனால், ஒரு இசைக்கலைஞர் உருவாக்கும் படைப்புதான் நமக்கு அந்த ஆற்றலைத் தருகிறது. அந்த வகையில், ரஹ்மான் சாரின் தீவிர ரசிகன் நான். 

‘ஜென்டில்மேன்’ பட பாடல்களுக்கு நான் நடனமாடியிருக்கிறேன். நாங்கள் கர்நாடகாவில் இருந்தபோதும், அந்தப் பாடல்களுக்கு நடனப் பயிற்சி செய்வோம். எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் பங்களிப்பு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரியது, அளப்பரியது. உங்கள் பாடல்களை தமிழில் கேட்கும் போதுதான் ஒரிஜினலாக இருக்கும். இந்தி அல்லது பிற மொழிகளில் கேட்டால் ​​ஏதோ ஒன்று மிஸ்ஸானது போல் இருக்கும். சொல்லப்போனால், ‘ரங்கீலா’ போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டுத்தான் நான் இந்தி மொழியையே கற்றுக்கொண்டேன். இது மிகையல்ல, உங்கள் பாடல்களை அவ்வளவு முறை திரும்பத் திரும்பக் கேட்டதால், அந்த மொழி எனக்கு நன்கு பரிச்சயமானது. ஒரு திரைப்படத்தின் வெற்றிக்குத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புதான் மிக முக்கியமானது. உங்கள் இசையில் நான் நடித்துள்ளது பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

கர்நாடகாவில் இருந்தபோதே நான் சொன்னதுதான், இப்போதும் சொல்கிறேன், எல்லோரும் கனவு காணுங்கள், எதையும் சாதிக்க முடியும். ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு, பலரும் என்னிடம் ஏன் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாய், இது அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு பாத்திரம் என்று கேட்டார்கள். ஆனால், நாம் அனைவரும் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறோம், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெவ்வேறு ஆற்றல்கள் இருக்கின்றன. நான் அந்தக் கதாபாத்திரத்தில் ‘சிவா’வின் ஆற்றலை உட்புகுத்தினேன். அந்த ஆற்றலை எனக்கு வழங்கியது உங்கள் இசைதான். ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நான் ‘சிவா’ பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அற்புதமான பாடல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி சார். தமிழ் மக்களுக்கு நன்றி. அவர்கள் சும்மா எதையும் ஏத்துக்க மாட்டார்கள். ஆனால் எனக்கு என்பை கொடுத்திருக்குறீர்கள். அதை நான் மதிக்கிறேன். என்னால் முடிந்த அளவு சிறப்பான நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.