தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளருமான கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகா இன்று கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் உட்பட 6 பேரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா, கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகாவின் கைதுக்கு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த சர்கஸ் அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலில் விமர்சனங்களும், ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம். இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் கார்பன் காபியாக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
