தேநீர் போடும் தேயிலை ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ரூ.200 அல்லது கொஞ்சம் பிராண்டடாக இருந்தால் ரூ.500-க்குள் இருக்கும். ஆனால், வெறும் 20 கிராம் தேயிலைக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்வதை யோசித்துப் பார்க்க முடிகிறதா? நம்புவது கடினமாக இருந்தாலும், அதுதான் ‘தா ஹாங் பாவோ’ (Da Hong Pao) தேநீரின் உலகப் புகழ்பெற்ற சிறப்பு.
நள்ளிரவில் வாலிபனாகும் டால்பின்… சாம்பல் நிறத்தில் பிறந்து; பிங்க் நிறத்தில் மாறுதாம்
உலகின் மிக விலையுயர்ந்த தேநீராகக் கருதப்படும் இந்த சீன ‘ஊலாங்’ (Oolong) ரகம், அதன் சுவையால் மட்டுமல்லாமல், அதன் அரிதான தன்மை, பல நூற்றாண்டுகால வரலாறு மற்றும் அரச பாரம்பரியத்தாலும் சர்வதேச அளவில் ஒரு பெரும் புதையலாகப் பார்க்கப்படுகிறது. மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதன் மூலத் தாய்ச் செடிகளிலிருந்து தேயிலைகளைப் பறிக்க சீன அரசு தற்போது முழுமையாகத் தடை விதித்துள்ளது.
‘பிக் ரெட் ரோப்’ – சீனாவில் விளைந்த அற்புதம்
சீன மொழியில் ‘தா ஹாங் பாவோ’ என்றால் “பெரிய சிவப்பு அங்கி” (Big Red Robe) என்று பொருள். சீனாவிலுள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமான ‘வுயி’ (Wuyi Mountains) மலைப் பகுதிகளில் இது விளைவிக்கப்படுகிறது. பச்சைத் தேயிலை (Green Tea) மற்றும் கருப்புத் தேயிலை (Black Tea) ஆகிய இரண்டின் கலவையாக இருக்கும் இந்த ‘ஊலாங்’ வகை தேநீர், புதிய ஆர்க்கிட் மலர்களின் நறுமணத்தையும், பழங்கள் மற்றும் லேசான புகைப் போன்ற சுவையையும் ஒருசேரக் கொண்டது. இதன் ஒவ்வொரு துளியும் குடித்த பிறகு நாவில் இயற்கையான இனிப்பை விட்டுச் செல்லும்.
தங்கத்தை விட 30 மடங்கு மதிப்பு
வுயி மலையின் செங்குத்தான பாறைகளில் ஆறே ஆறு தாய் மரங்கள் மட்டுமே உள்ளன. இவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை மற்றும் நாட்டின் விலைமதிப்பற்ற தேசியச் சொத்தாகக் கருதப்படுகின்றன. மிகவும் புகழ்பெற்ற ஏலம் ஒன்றில், வெறும் 20 கிராம் தா ஹாங் பாவோ தேயிலை 2,08,000 யுவான், சுமார் ரூ.1.23 லட்சம் வரை ஏலம் போனது.
பி.பி.சி அறிக்கையின்படி, இதன் ஒரு கிராம் தேயிலையின் விலை $1,400, சுமார் ரூ.1.20 லட்சம் வரை விற்பனையானது. இது எடையின் அடிப்படையில் தங்கத்தை விட 30 மடங்கு அதிகம். இந்த மூலத் தேயிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கப் டீயின் மதிப்பு சுமார் ரூ.8.5 லட்சத்திற்கும் அதிகமாகும்.
அரசாங்கத் தடையும், 142 கோடி காப்பீடும்
2006-ஆம் ஆண்டில், சீன அரசாங்கம் இந்த 6 தாய் மரங்களைப் எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாக்க அவற்றிலிருந்து வணிக ரீதியாகத் தேயிலை பறிப்பதை நிரந்தரமாகத் தடை செய்தது. இதன் வரலாற்றுச் சிறப்பைக் கருதி, இந்தத் தாவரங்களுக்குச் சீன அரசு 100 மில்லியன், சுமார் ரூ.142 கோடி அளவிற்குப் பெரும் தொகையைக் காப்பீடு செய்துள்ளது. இந்த மரங்களில் இருந்து இறுதியாகப் பறிக்கப்பட்ட தேயிலை, பேஜிங்கில் உள்ள ‘பேலஸ் மியூசியத்தில்’ பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. தற்போது சந்தையில் கிடைக்கும் ‘தா ஹாங் பாவோ’ தேயிலைகள், இந்த தாய் மரங்களின் குளோனிங் மரங்களில் இருந்தோ அல்லது அதற்கு நிகரான சுவை கொண்ட உயர்தர தேயிலைகளின் கலவையிலோ தயாரிக்கப்படுபவை ஆகும்.
எப்படிப் பருக வேண்டும்?
பாரம்பரிய சீன களிமண் பாத்திரங்களில் 95-100 டிகிரி செல்சியஸில் கொதிநீரில் இந்தத் தேயிலை ஊற வைக்கப்படுகிறது. சாதாரண டீ பைகளைப் போல ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியாமல், இந்தத் தேயிலைகளை பலமுறை ஊறவைத்து டீ தயாரிக்கலாம். குறிப்பாக 3 மற்றும் 4-வது முறையில் ஊற வைக்கும் போதுதான் இதன் உண்மையான நறுமணமும், இனிப்பும் உச்சக்கட்டத்தைச் அடையும் என்று தேநீர் விரும்பிகள் கூறுகின்றனர்.
