தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது. அதாவது வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை, மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை உச்ச நேரங்களில் (Peak Hours) தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வாங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டிருந்தது.
அதன்படி, மொத்தம் 2,100 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 என்ற விலையில் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. ஏற்கனவே, அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அப்போது, ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 37.50 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான், டிசம்பர் முதல் மே மாதம் வரை மாலை நேரங்களில் பயன்படுத்துவதற்காகக் கொள்முதல் செய்யப்பட உள்ள மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ. 41.50 என நிர்ணயிக்கப்பட்டது எனத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி தமிழக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரூ. 37 முதல் 41 வரையிலான அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப் போவதில்லை. இன்று டெண்டரைத் (ஒப்பந்தப்புள்ளி) திறந்தபோது, பல நிறுவனங்கள் மிக அதிக விலையைக் குறிப்பிட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களைச் சமாளிப்பதற்கான போதிய மின்சாரம் இருப்பதாலும், அடுத்த கோடைகாலத்திற்கான மின்சாரம் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருவதாலும், இந்த விலைகள் நியாயமற்றவையாக உள்ளன.
இதற்கிடையில், வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்களை நாம் கொண்டு வரவுள்ளோம். எனவே, இனி அதிக விலைக்கு எரிவாயு கொள்முதல் இருக்காது. மேலும், இந்த டெண்டரை ரத்து செய்ய நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
