சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த நல்லகண்ணு அவர்களின் மார்பளவு சிலை திறப்பு மற்றும் “அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர்” நூல் வெளியீட்டு விழாவை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நல்லகண்ணுவின் மார்பளவு சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, “அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர்” நூலையும் வெளியிட்டார். தொடர்ந்து இரு தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
திமுக – கம்யூனிஸ்ட் உறவு தொடரும்
விழாவில் பேசிய சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையே நீண்டகால கொள்கை ரீதியான உறவு இருப்பதாகக் குறிப்பிட்டார். அண்ணா,பெரியார், கலைஞர், ஸ்டாலின் ஆகியோரின் சமூகநீதிக் கொள்கைகள் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன என்றார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் திமுக போன்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயல்பட கம்யூனிஸ்ட் இயக்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“களப்போராளிகளை விட ரீல்ஸ் போராளிகள் கொண்டாடப்படுகிறார்கள்”
தலைமை உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், நல்லகண்ணுவுக்கு முதல் முறையாக சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார். சமூகத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய நபர்களையே கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துவதாக கூறினார்.
தேர்தலுக்கு பின்னால் நடந்த சம்பவம்! உண்மை உடைத்த திமுக நிர்வாகி! – aandal priyadharshini
இன்றைய சூழலில், மக்களுக்காக களத்தில் போராடியவர்களை விட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடும் நபர்களே அதிகமாக கொண்டாடப்படுகின்றனர் என்று அவர் விமர்சித்தார்.
குதிரை பேரம் குறித்த விமர்சனத்திற்கு பதில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்றதற்கு “குதிரை பேரம் நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பப்படுவதாக குறிப்பிட்ட உதயநிதி, “இங்கு வந்திருப்பவர்களுக்கே குதிரை பேரம் எங்கு நடைபெறுகிறது என்பது தெரியும்” என்று மறைமுகமாக பதிலளித்தார்.
நீட் எதிர்ப்பில் திமுகவின் நிலைப்பாடு
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டிற்கு புதியதல்ல என்றும், நீட் அறிமுகமான நாளிலிருந்தே திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் உதயநிதி கூறினார். உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம் சுமார் 80 லட்சம் கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.
2021-ஆம் ஆண்டு திமுக அரசு அமைந்ததும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துகளை சேகரித்து அறிக்கை பெற்றதாகவும் தெரிவித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் நீட் விலக்கு சட்ட மசோதா கொண்டு வரப்பட்டாலும், ஆளுநர் ஒப்புதல் வழங்காததால், மாநில அரசு உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தியதாக கூறினார்.
டெல்லி போராட்டம் நீட் ஒழிப்பின் தொடக்கம்
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டம் ஒரு சாதாரண ஆர்ப்பாட்டம் அல்ல என்றும், “நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கம் அந்த டெல்லி போராட்டம்தான்” என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்தப் போராட்டம் முடிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என்றும், நீட் விலக்குக்கான அரசியல் மற்றும் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சமூகநீதிச் சிந்தனையையும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதான அவரது மரியாதையையும் நினைவுகூர்ந்த உதயநிதி, நல்லகண்ணுவுக்கு தகைசால் விருது வழங்கியது முதல் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியது வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்த பணிகளை சுட்டிக்காட்டி, திமுக – கம்யூனிஸ்ட் உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்று தெரிவித்தார்.
Source link
