புவனேஷ்வர்: ஒடிசாவில் பெய்து வரும் கனமழைக்கு 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகி இருக்கின்றனர்.
ஒடிசாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி அதிகரித்துள்ளதால் 6 மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
மழை வெள்ளத்தில் சிக்கி தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் பலியாகினர். 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். பாலாசோர், பத்ராக், ஜாஜ்புர் மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறியதாவது;
முதல்வரின் மாவட்டமான கியோஞ்சர் மாவட்டத்தில் தான் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கியோஞ்சர் மாவட்டம் குறைவான பாதிப்பையே சந்தித்து உள்ளது.
பணியில் இருந்து தீயணைப்பு வீரர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவரும், வெள்ள நீரில் சிறுவனும் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள பாலாசோர், பத்ராக், ஜாஜ்புர் மாவட்டங்களில் எந்த உயிரிழப்பும் இதுவரை பதிவாகவில்லை.
இவ்வாறு அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறினார்.
வெள்ள நிலைமையை கண்காணித்து வரும் முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி, மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.
