பெங்களூரூ: கர்நாடகாவில் 4 மேல்சபை தொகுதிகளுக்கு அக்., 23ம் தேதி ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தது. இந்த அனைத்து தொகுதிகளிலும் பாஜ, மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. பெங்களூரூவில் ஜேடிஎஸ் வேட்பாளர் ஏபி ரங்கநாத், தற்போதைய காங்கிரஸ் எம்எல்சி புட்டன்னாவை 908 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வடகிழக்கு ஆசிரியர்கள் தொகுதியில் பாஜ எம்எல்சி ஷஷில் ஜி நமோஷி, காங்கிரஸ் வேட்பாளர் ஷரணப்பா மத்தூரை தோற்கடித்தார். ஷஷில் 5வது முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியிலும் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். மேலும், ஒரு தொகுதியை பாஜ தக்க வைத்துக் கொண்டது.
கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு இந்தத் தேர்தல் தோல்வி பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, காங்கிரஸ் முதல்வர் சிவகுமாரின் காதில் பூவைத்ததைப் போன்ற மீம்ஸ்களை கர்நாடகா பாஜ டிரெண்டாக்கி வருகிறது.
ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தும் காங்கிரஸ் தோற்றுள்ளதால், இப்போதும் ஓட்டு திருட்டு நடந்துள்ளதாக அவர்களால் குற்றம்சாட்ட முடியுமா? என்று ஜேடிஎஸ் தலைவர் நிகில் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
