கொழும்பு: சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இரு கும்பல்களிடையே மோதல் ஏற்படும் என்ற அச்சுறுத்தலால், இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஹிந்து கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையின் தேவிநுவராவில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது. இங்கு ஆண்டு தோறும், ‘எசல பெரஹெர’ எனும் திருவிழா நடைபெறும். இதில், முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பங்கு பெறும் புகழ்பெற்ற காவடி ஆட்டம் நடைபெறும்.
இந்தாண்டு திருவிழா, 23ம் தேதி தொடங்கியது. காவடி ஆட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.
இந்தாண்டு காவடி ஆட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை, இலங்கையில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசிக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர்களில் ஒருவரான செஹான் சத்சாராவுடன் தொடர்புடைய நபர்கள் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து செயல்படும் மற்றொரு சட்டவிரோத கும்பல் தலைவரான கஞ்சிபாணி இம்ரானுக்கும், சத்சாராவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கோவில் விழாவின்போது இரு தரப்பும் தாக்கிக் கொள்ளலாம் என, இலங்கை உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவடி ஆட்ட நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கோவில் நிர்வாகத்துக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
