கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு: வாங்கும் முறையை மாற்றிக்கொண்ட அமெரிக்கர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மளிகைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்களின் வாங்கும் முறைகளை முழுதுமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் வீடுகளில் சமைப்பதற்காக வாங்கும் உணவு பொருட்களின் விலை தற்போது, 33 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வின் காரணமாக பொதுமக்கள் தங்களின் பிடித்த உணவுகளை தவிர்ப்பது, விலையை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது போன்ற புதிய பழக்கங்களுக்கு மாறியுள்ளனர்.

பலரும் சூப்பர் மார்க்கெட் செல்வதற்கு முன்பே, செயலிகள் வாயிலாக எங்கு விலை குறைவாக உள்ளது, என்னென்ன சலுகைகள் உள்ளன என்பதை ஆராய்ந்த பிறகே பொருட்களை வாங்குகின்றனர். விலை உயர்ந்த பிராண்டட் பொருட்களுக்கு பதிலாக, மலிவான பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் மாறி வருகின்றனர்.

மாட்டிறைச்சியின் விலை, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 79 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால், பல குடும்பங்கள் இறைச்சி வாங்குவதை குறைத்து கொண்டுள்ளன; சில குடும்பங்கள் முற்றிலும் தவிர்த்துவிட்டன.

தொடர் விலைவாசி உயர்வு காரணமாக அமெரிக்க குடும்பங்கள் தங்களுக்கென பிரத்யேகமான சிக்கன திட்டங்களை வகுத்து செலவுகளை கையாண்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக பல அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் காபி, பழங்கள், கடல் உணவுகள் போன்ற பல அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட சுங்க வரிகளும் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.

Source link