டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதகாலம் ’கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’யின் சார்பாக நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின் விளைவாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலகினார். நாடாளுமன்றத்தில் ’வினாத்தாள் தடுப்பு மசோதா’ கொண்டுவரப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், இளைஞர்களுக்கு நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். ,ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடினார். இந்நிலையில், சமீபத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உடுப்பியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் யாஷ்பால் சுவர்ணா, ”நடிகர்களின் மனதில் விஷ விதைகளை விதைப்பதை பிரகாஷ் ராஜ் நிறுத்த வேண்டும், இல்லையெனில் அரேபியக் கடலில் உள்ள மீன்களுக்கு உணவாக நேரிடும் . வெளிநாட்டில் பணம் வாங்கிக்கொண்டு கலவரம் செய்யக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முயல்கிறது. ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல. அவர்களின் பின்னணியைச் ஆராய்ந்தால் உண்மை வெளிவரும். இத்தகைய அரசியலைத் தொடர்ந்தால் பாஜக தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று எச்சரித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களான ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முகங்கள் மற்றும் கரப்பான்பூச்சி படங்கள் ஒட்டப்பட்ட விளம்பரப் பலகைகள் மீது பாஜகவினர் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
