நமது சிறப்பு நிருபர்
வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில், தற்போதுள்ள மோசடி தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், ”வினாத்தாள் கசிவை தடுக்க கடும் விதி களுடன் கூடிய புதிய மசோதா பார்லி.,யில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்,” என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கடும் சிறைத்தண்டனை, அதிக அபராதங்களுடன் சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-இல் திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்களுக்கு, இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இணங்க, ஆவணக் கசிவு வழக்குகளைக் கையாள்வதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான ஒரு பிரிவும் சட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
முன்மொழியப்பட்ட சட்ட விதிகள், கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களுக்கும் வழிவகுக்கும். தற்போது, தனிப்பட்ட வழக்குகளில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.
பொதுத் தேர்வை நடத்துவதில் ஈடுபடும் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். இந்த கடும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது.
