கட்சிப் பதவியில் பாரபட்சம்.. தவெக எம்எல்ஏவுக்கு எதிராக சாலை மறியல்.. உத்திரமேரூரில் நடந்தது என்ன?

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் தொகுதி தவெக எம்எல்ஏ முனிரத்தினத்தை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறிய விஜய் ஆட்சியில் ஊழல் மட்டுமே நடப்பதாக குற்றம்சாட்டி தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவெக ஆட்சி அமைத்த பின் அக்கட்சியினர் மத்தியில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இதனை களைய மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்திய தவெக தலைமை, எம்எல்ஏ-க்களை அந்தந்த தொகுதி மாவட்டச் செயலாளராக நியமனம் செய்து உத்தரவிட்டது. இதன்பின் மாவட்டச் செயலாளர்கள் கட்சி பதவிகளை நிரப்பி வருகின்றனர்.

இதனிடையே கட்சிப் பதவிகளுக்கு நிர்வாகிகள் பணம் வசூல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. அதனை உறுதி செய்யும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி தவெக எம்எல்ஏ முனிரத்தினத்தை கண்டித்து அக்கட்சியினரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தவெகவினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கட்சி பொறுப்புகளில் பாரபட்சம் காட்டுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். வாலாஜாபாத் சாலையில் தவெகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தவெகவினர், உத்திரமேரூர் தொகுதி தவெக எம்எல்ஏ முனிரத்தினம் ஒழிக என்று கோஷம் எழுப்பினர்.

அதேபோல் ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என்று கூறிய விஜய் ஆட்சியில் ஊழல் மட்டுமே நடப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. சுமார் அரை மணி நேரமாக சாலை மறியல் போராட்டம் நடந்த நிலையில், போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் உள்ளாட்சித் தேர்தலின் போது தவெகவில் உட்கட்சி பூசல் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஏற்கனவே கவுன்சிலர் சீட் கொடுக்க பலரும் பணம் பெற்றுவிட்டதாக பேச்சுகள் அதிகரித்துள்ளது. இதனால் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடையலாம் என்று சொல்லப்படுகிறது.