தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்ற போது போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும் அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளருமான கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகா நேற்று (20.10.2026) கோவையில் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கணவர் முருக சந்திரகுமார் உட்பட 9 பேரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா, கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் தாராபுரம் அழைத்து வரப்பட்ட இவர்கள், தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியின் வீட்டில் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது வழக்கறிஞர்களின் வாதங்களுடன் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தீவிர விசாரணைக்குப் பிறகு, கார்த்திகா உட்பட 9 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, கைதான 9 பேரும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கைது நடவடிக்கைக்கு அரசியல் பழிவாங்கல் எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளைக் கைது செய்ததைக் கண்டித்து தவெக அரசுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் வரும் 24 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா, அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக. சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை. மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரைப் பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிறது தவெக அரசு.
இந்த அடக்குமுறையைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின் பேரில், வரும் சனிக்கிழமை (24-10-2026) காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
