சென்னை: கட்டுமான திட்ட அனுமதிக்கு, கட்சி நிதி வசூல் நிறுத்தப்பட்டு உள்ளதால், அதன் பயன் மக்களுக்கு கிடைக்கும் வகையில், வீடுகள் விலையை சதுரடிக்கு, 100 ரூபாய் வரை குறைக்க, கட்டுமான நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுரடிக்கு, 27 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கட்டட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள், கட்டுமான நிறுவனங்களை அணுகி, கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டட அனுமதி நிறுத்தி வைக்கப்படும்.
இதில் கட்சி நிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.
தற்போது, கட்டட அனுமதி வழங்க, கட்சி நிதி வசூலிக்க கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.
இந்த அமைப்புகளின் நிர்வாகிகள், சமீபத்தில் முதல்வர் விஜய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர், செயலரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, கட்சி நிதி வசூல் நிறுத்தப்பட்டதன் பயன், மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, வீட்டுவசதி துறை அதிகாரிகள், கட்டுமான துறையினரிடம் வலியுறுத்தினர்.
