கணவரின் தம்பிக்கு ஜோடி, கடும் காய்ச்சலுடன் மழையில் ஆடிய ஸ்ரீதேவி; அந்த பாட்டு ரொம்ப ஃபேமஸ்

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி தற்போது இல்லை என்றாலும் அவரைப்பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றனர், அந்த வகையில், தனது 27 வயதில் கடுமையான காய்ச்சலிலும், மழையில் நனைந்தபடி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

யஷ் சோப்ராவின் ‘லம்ஹே’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு 27 வயது மட்டுமே ஆகியிருந்தது. இப்படத்தில் ஸ்ரீதேவியின் அழகான லுக் இன்றும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த படத்தில் ‘மேகா ரே மேகா’ என்ற பாடலின் படப்பிடிப்பின் போது ஸ்ரீதேவிக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது என்று ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த எவர்கிரீன் பாடலுக்காக ஆடைகளையும் வெள்ளி நகைகளையும் வடிவமைத்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட நீதா லுல்லா ‘லம்ஹே’ படப்பிடிப்பின் முதல் நாள், ஸ்ரீதேவியுடன் எனக்கு இது இரண்டாவது படம் ‘மேகா ரே மேகா’ பாடல் படமாக்கப்படும் நேரத்தில், கருப்பு மற்றும் மெரூன் நிறத்திலான, “முற்றிலும் ராஜஸ்தானி பாணியிலான” ஒரு பாரம்பரிய ஆடையை வடிவமைக்குமாறு ஸ்ரீதேவி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த லுக்கிற்கான பாவாடையை தான் சொந்தக் கையால் பிளாக் பிரிண்ட் (Block print) செய்தேன்., அதனுடன் சிப்பிகளும், சிவப்பு மற்றும் மெரூன் நிற முத்துக்களும் பதித்த பிரத்யேக வெள்ளி நகைகளை உருவாக்கினேன். ஆனால் நகைகளை அணிய வைக்கும் நேரத்தில் தான் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்தேன். “நான் நகைகளை அணியத் தொடங்கிய போதே அவர்களின் உடல் சூடாக இருப்பதை என்னால் தொட்டுணர முடிந்தது. 

அந்த பாடல் மழையில் நடனம் ஆடுவது போன்ற காட்சி என்பதால், நான் அவர்களிடம் ‘உங்களுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கிறதே, இந்த காய்ச்சலை வைத்துக் கொண்டு எப்படி மழையில் ஷூட் செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஆனால், ‘செய்ய வேண்டிய காரியத்தை நாம் செய்தே தீர வேண்டும்’ என்பது தான் அவர்களின் பதிலாக இருந்தது. அந்த வார்த்தைகள் எனது தொழில் வாழ்க்கை முழுவதும் என் கூடவே இருந்தது. அது ஒரு பெரிய பாடம். ஏதாவது ஒன்றை உருவாக்கும் போது, செய்ய வேண்டிய விஷயங்களை நாம் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். இதைத்தான் நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்,” என்று நீதா லுல்லா கூறினார்.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்ட நீதா லுல்லா, ஸ்ரீதேவியின் தொழில்முறை அர்ப்பணிப்பிற்கு தனது மரியாதையை செலுத்தினார். “இதனால்தான் ஜாம்பவான்கள் என்றென்றும் நினைவுகூரப்படுகிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். எனது தொழில் வாழ்க்கையின் சில தருணங்கள் என்றென்றும் என்னுள் நிலைத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் இது. 

லம்ஹே படத்தில் ஸ்ரீதேவியுடன் பணிபுரிந்தபோது, என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அர்ப்பணிப்பு உணர்வை நான் நேரில் கண்டேன். அன்று முதல் நான் என்னுடன் வைத்திருக்கும் ஒரு நினைவகம் இது, சொந்தக் கலையின் மீதான உண்மையான அர்ப்பணிப்பு என்ன என்பதை இது நினைவூட்டுகிறது,” என்று நீதா குறிப்பிட்டுள்ளார்.

1991 ஆம் ஆண்டு வெளியாகி, யஷ் சோப்ரா இயக்கிய ‘லம்ஹே’ திரைப்படத்தில் அனில் கபூருடன் இணைந்து ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிற்காலத்தில் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற இத்திரைப்படம், ஸ்ரீதேவியின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த நடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அனில் கபூர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link