தமிழக முதலமைச்சர் விஜய் சில தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், போதிய பருவமழை இல்லாததால் காவிரி ஆற்றுப்படுகை பல இடங்களில் வறண்டு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரில் பெருமளவு நீர் நிலத்தடியில் உறிஞ்சப்பட்டதால், பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் டெல்டா பகுதிகளை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குருவை சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை
காவிரி டெல்டா பகுதிகளில் குருவை மற்றும் சம்பா சாகுபடி முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமான காலத்தில் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது காவிரி கதவணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வினாடிக்கு 9,938 கன அடி நீர் வரத்து
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மாயனூர் கதவணைக்கு தற்போது வினாடிக்கு 9,938 கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கதவணைமுழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பாசனத்திற்கான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே கிருஷ்ணராயபுரம், தென்கரை, கட்டளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறப்பு குறித்த கேள்வி…அமைச்சர் ஆனந்த சொன்ன பதில்
1.12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் காவிரி டெல்டா மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது காவிரி ஆற்றுப்படுகை வறண்டு காணப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்திருந்த நிலையில், தற்போது கதவணை நிரம்பி வாய்க்கால்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இதனால், நடப்பு சாகுபடி பருவத்தில் தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Source link
