ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
டொரோன்டோவின் ஹம்பர்வுட் பவுல்வார்ட் மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வார்ட் சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் நவ்நீத் கவுர் என்ற 26 வயதான பெண் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தலைமறைவான பிரம்ப்ட்டன் பகுதியைச் சேர்ந்த ஷரண்ஜித் சிங்(37) என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த நவ்நீத் கவுர் பின்னால் வந்த கொலையாளி, அவருடன் பேசிக் கொண்டு இருந்ததாகவும், பிறகு துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றவாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
