கனமழையால் முடங்கிய கோவை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர்; நகரின் பல இடங்களில் மழைநீர் தேக்கம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மழை பாதிப்புகள் குறித்து அறிந்துகொள்ள கோவை லங்கர் கானா பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உடன் அமைச்சர் சம்பத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர்:

கோவையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, கோவை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தரைத்தள வார்டுகளைச் சூழ்ந்துள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவு பாதை, வெளிநோயாளி வார்டுகள் மற்றும் இரத்தப் பரிசோதனைக்கூடப் பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகள், குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கட்டில்களில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் தங்களது தேவைகளுக்காகக் கீழே இறங்கக்கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.

சிகிச்சை பெற வந்த நோயாளிகளும், அவர்களுக்கு உதவியாக வந்த உறவினர்களும் முழங்காலளவு நீரில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை நீருக்குள் தள்ளிச் செல்ல ஊழியர்கள் கடும் போராட்டத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், நோயாளிகளையும் மருத்துவ உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் உடனடியாகத் தலையிட்டு நீரை முற்றிலுமாக அகற்றிச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து:

கோவை லங்கர் கானா ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் பெருக்கெடுத்து தேங்கியதால், அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் செல்லும் பாதையில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

New Project (6)

இதேபோல், மதுக்கரை குரும்பபாளையம் ரயில்வே பாலத்தில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குவாரி ஆபீஸ் – மதுக்கரை மார்க்கெட் சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழைநீரும் சாக்கடை கழிவும்:

கோவை நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி காலனியில் சாலையில் உடைந்து வெளியேறும் சாக்கடை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சுங்கம் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியில் தொடர் மழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. வீடுகளில் தேங்கிய மழைநீரை பொதுமக்கள் வாளிகள் மூலம் வெளியேற்றி வரும் அவலநிலை நிலவுவதுடன், அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

மாநகராட்சி 62-வது வார்டுக்கு உட்பட்ட சஃபா கார்டன் பேஸ் 3 பகுதியில், வீடுகளின் வாசல் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் தேங்கியுள்ளதால் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவதுடன், அன்றாடப் பணிகளுக்குச் செல்வோர் வீட்டை விட்டு வெளியே செல்வதற்குக்கூட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சஃபா கார்டன் பேஸ் 3 பகுதியில் முறையான தார் சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையிலும் தொடர்ந்த ஊர்வலம் மற்றும் வானிலை எச்சரிக்கை:

இத்தகைய கொட்டும் மழையிலும் கோவையின் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அக்டோபர் 25 அன்று ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ள இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கனமழையின்போது தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலும், நீர்நிலைகளின் அருகிலும் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Source link