கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தி.மு.க.,வை வழிநடத்தும் தகுதி உள்ளது?: அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

திருச்சி: “தி.மு.க.,வை வழி நடத்த, கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என, அக்கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டெடுப்பு நடத்த தயாரா,” என, அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி அரசு சட்டக்கல்லுாரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின், சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டி:‘நீட்’ தொடர்பான மாணவர் போராட்டங்களில், தேவையற்ற அரசியலை தி.மு.க., செய்கிறது. சிலருக்கு பணம் கொடுத்து, தி.மு.க., ‘டீ-ஷர்ட்’ அணிவித்து, போராட்டத்தில் அமர வைத்துள்ளனர்.

இளைஞர்களை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் தவறாக வழி நடத்துகின்றனர். மாணவர்களின் உணர்வுப்பூர்வமான போராட்டங்களை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ‘ஜென்சி’ என்ற வார்த்தையை கூட, சரியாக புரிந்து கொள்ளாத அளவுக்கு உதயநிதியின் பேச்சு உள்ளது.

தி.மு.க.,வை வழி நடத்தும் தகுதி தனக்கு உள்ளதா என்பதை, கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டெடுப்பு நடத்தி, உதயநிதி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வை வழி நடத்த, துணை பொதுச்செயலர் கனிமொழி, உதயநிதி இருவரில் யாருக்கு தகுதி உள்ளது என்பதை, தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில், பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறோம்; சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து வருகிறோம். முதல்வர் விஜய் நல்ல முடிவை எடுப்பார். மேகதாது விவகாரத்தில், ஸ்டாலினுக்கும், உதய நிதிக்கும் முழுமையான புரிதல் இல்லை. கருணாநிதி ஆட்சி கால காவிரி ஒப்பந்த விபரங்கள் பற்றியும் அவர்களுக்கு தெரியவில்லை.

கர்நாடகாவுக்கு முதல்வர் விஜய் செல்வது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை, முதல்வர் அலுவலகம் அறிவிக்கும். நீண்ட காலமாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் விடுதலை தொடர்பாக, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link