மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், பலியானவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில் மனு முழுவதுமாக தயாராகவில்லை, எனவே ஜூலை 27ம் தேதி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசின் தரப்பில் கேட்கப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 27ம் தேதிக்கு நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. அதன் படி இன்று நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 31 பேருக்கு பணி வழங்கியது என்பது அரசின் கொள்கை முடிவு. அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்கு உட்பட்டு வேலை வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒப்புதல் பெற விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
