கரூர்: கரூரில் மாவட்ட திமுக அலுவலகத்துக்கு 18 ஆண்டுகளாக, சொத்துவரி செலுத்தவில்லை. 28.58 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.
கரூர் மாநகராட்சி, 30வது வார்டுக்குட்பட்ட கவுரிபுரம் விரிவாக்கத்தில், திமுக மாவட்ட அலுவலகம் இயங்குகிறது. கடந்த 2008ல் இந்த அலுவலகம் திறக்கப்பட்டபோது, ஆண்டுக்கு, 1.18 லட்சம் ரூபாய் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, ஆண்டு வரியாக, 2.36 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
2008ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு மார்ச் வரை, 28 லட்சத்து, 58,242 ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக, திமுக அலுவலகத்தில் வரி வசூல் செய்ய, கரூர் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக தலைமையும் வரி கட்ட ஆர்வம் காட்டவில்லை.
மாநகராட்சி ஊழியர்கள், ‘வரி கட்டவில்லை என்றால், குடிநீர் இணைப்பு துடிக்கப்படும்’ என, அப்பாவி மக்களை மிரட்டுகின்றனர். ஆனால், அரசியல் கட்சி அலுவலகங்கள், முக்கிய நிறுவனங்களில் அதிகளவில் பாக்கி வைத்திருந்தாலும், அந்த வீதி பக்கம் கூட எட்டிப்பார்ப்பதில்லை.
கரூர் மாநகராட்சி கமிஷனர் பிரித்திவிராஜ் கூறுகையில், ”கரூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலக வரி பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
