கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ”கர்நாடகத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் கன்னடர்களைத் திட்டமிட்டே புறக்கணிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”பெஙளூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழ், தெலுங்கு மொழி பேசுவோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சுயவிவரத்தில், தாய்மொழி கன்னடம் என்று இருந்தால், அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அத்துடன் பெங்களூரூவில் உள்ள கல்லூரிகளில் ஆள் எடுப்பு பணிகளையும் மேற்கொள்வதில்லை.
வேறுபகுதிகளில் இருந்து வரும் ஆட்களைக் குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு நியமனம் செய்துகொள்ளப்படுகிறார்கள். இதனால், கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த பிரச்சனைக்குக் கர்நாடக அரசு தீர்வு காண வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சிவகுமார் கவலை தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊஅகப்பதிவில், ”கர்நாடகாவில், கன்னடர்களே நாட்டின் இறையாண்மை கொண்டவர்கள். எனவே, அவர்களின் உரிமை மற்றும் வேலைவாய்ப்பு பறிபோவதை அனுமதிக்க முடியாது. உலகம் பெங்களூருவைத் தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராகப் பார்க்கிறது. கன்னடர்களின் திறமை மீது அபார பெருமை உள்ளது. எந்தவொரு தனியார் நிறுவனமும் திட்டமிட்டு கன்னடர்களைப் புறக்கணிப்பது தெரியவந்தால், அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
